உத்தரப் பிரதேச மாநிலம் பிரோஸாபாத் மாவட்டம் சிர்ஸாகஞ்ச் பகுதியில் 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் கிஷன் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டான்.
கமார்பூர் பைஜியா கிராமத்தில் தனது வீட்டின் அருகே விளை யாடிக் கொண்டிருந்த கிஷன் பக்கத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று முன்தினம் இரவு விழுந்து விட்டான். உடனே சிறுவனின் தந்தையிடம் கிஷன் கிணற்றுக்குள் விழுந்த தகவலை மற்ற சிறுவர்கள் தெரிவித்தனர். அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 17 மணி நேர முயற்சிக்குப் பிறகு சிறுவன் கிஷன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
சிர்ஸாகஞ்ச் பகுதியை புதிய வட்டமாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு எம்.எல்.ஏ. ஹரி ஓம் யாதவ், மாவட்ட ஆட்சியர் விஜய் கிரண் ஆனந்த், பிரோஸாபாத் காவல் துணை கண்காணிப்பாளர் பியூஷ் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் அந்த வழியே திரும்பிக் கொண் டிருந்தனர். அப்போது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த செய்தியை அறிந்து அங்கு நேரில் வந்த அவர்களை மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
17 மணி நேரமாக கிணற்றில் கிடந்ததால் மயக்கமடைந்திருந்த சிறுவன் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.