கேரளாவில் அன்னாசிப்பழத்தில் வெடிபொருட்களை வைத்து கருத்தரித்த யானை ஒன்று கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான மேனகா காந்தி கேரள அரசையும் மலப்புரம் பகுதியையும் தாக்கிப் பேசினார்.
அதாவது சம்பவம் நடந்த இடம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இடமாகும். இந்தத் தொகுதி எம்.பி. ராகுல் காந்தி என்ன செய்யப்போகிறார்? மேலும் கேரள மலப்புரம் மாவட்டம் குற்றச்செயல்களுக்கு பெயர் பெற்றது என்றும் இங்கு விலங்குகள் வேட்டையாடப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று சாடியிருந்தார்.
இதனையடுத்து முதல்வர் பினராயி விஜயன் கூட “யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொன்றது கண்டிக்கத்தது, கொடூரமானதுதான். ஆனால் இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் மலப்புரம் மாவட்டத்தின் பெயரைக் கெடுக்கவும் திட்டமிட்டுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய அமைச்சரே ஈடுபட்டு அறிக்கை விடுகிறார். இது துரதிர்ஷ்டமானது.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். சம்பவம் நடந்தது மலப்புரம் மாவட்டத்தில் அல்ல, பாலக்காடு மாவட்டம். ஆனால், மலப்புரம் என்று பிரச்சாரம் செய்யபப்டுகிறது. ஆனால் இந்தத் தவறைச் சரிசெய்ய மத்திய அமைச்சர் கூட தயராக இல்லை. திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வெறுப்பைப் பரப்ப முயற்சிப்பதை சகிக்க முடியாது, ஏற்க முடியாது” என்று கண்டனம்.
இந்நிலையில் மேனகா காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேக்கர்கள் சிலர் அவரது ‘பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஹேக்கர்கள் வெளியிட்ட தகவலில் ‘பாலக்காடு மாவட்டத்தில்தான் பெண் யானை கொல்லப்பட்டது. ஆனால் மலப்புரம் மாவட்டத்தை மேனகா காந்தி விமர்சித்துள்ளார். விலங்குகள் மீது அன்பு காட்டுவதாகக் கூறும் மேனகா, முஸ்லிம்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.