மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம் 
இந்தியா

அரசு ஊழியர்கள் வாரம் ஒருமுறை கட்டாயம் அலுவலகம் வராவிட்டால் ஊதியம் பிடித்தம்: மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை

பிடிஐ

கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அலுவலகத்துக்கு வாரத்துக்கு ஒருமுறை நேரடியாக வந்து பணியாற்றாவிட்டால் ஊதியக் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் நாட்டிலேயே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. இங்கு இன்றைய நிலவரப்படி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,793 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 32,681 ஆகவும் உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,710 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் மகாராஷ்டிராவின் கூடுதல் தலைமைச் செயலாளர் மனோஜ் சவுனிக் இன்று பிறப்பித்த உத்தரவில், “மகாராஷ்டிர அரசில் உள்ள அனைத்துத் துறைகளின் தலைவர்களும் தங்கள் துறைகளின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். மருத்துவ விடுப்பு மற்றும் கரோனா காரணமாக வயதின் அடிப்படையில் விடுப்பில் உள்ள ஊழியர்கள் தவிர்த்து அனைத்து ஊழியர்களும் வாரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும்.

அவ்வாறு அலுவலகத்துக்கு வாரம் ஒருமுறை கூட வராமல் பணியாற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், லாக்டவுன் காலத்தில் அனுமதியில்லாமல் சென்ற ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர் அதிகாரிகள் ஒதுக்கிய நாளில் குறிப்பிட்ட அரசு ஊழியர் பணிக்கு வராமல் இருந்தால் அந்த வாரம் முழுவதும் விடுப்பு எடுத்ததாகக் கணக்கில் கொள்ளப்பட்டு ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள். இந்த விதிமுறை வரும் 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் காலத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளைச் சந்திக்க உத்தரவிட்டால் பெரும்பாலான ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவதால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக 5 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தால் போதுமானது என்று அரசு உத்தரவிட்டும் பல ஊழியர்கள் கரோனா வைரஸுக்கு அஞ்சி வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.

SCROLL FOR NEXT