மேற்குவங்கத்தில் உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சரவை குழு இன்று ஆய்வு செய்து வருகிறது.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசக் கடல் பகுதி வழியாகக் கரையைக் கடந்தது.
உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹராவிலும் புயலால் சேதங்கள் ஏற்பட்டாலும் இரு மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான். நார்த் 24 பர்கானாவில் 17 பேர், கொல்கத்தவில் 15 பேர், பசிராத்தில் 10 பேர், புயல் கரையைக் கடந்த சுந்தரவனக்காடுகள் அடங்கிய தெற்கு பர்கானாவில் 4 பேர் என மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் புயலுக்குப் பலியாகியுள்ளனர்.
லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் மேற்குவங்கத்தில் உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சரவை குழு இன்று ஆய்வு செய்து வருகிறது. 24 பர்கானா மாவட்டத்தில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.