கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெண் யானை ஒன்று, வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தைச் சாப்பிட முயன்று சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இது சுற்றுச்சூழல், விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காட்டுப் பன்றியிடம் இருந்து தங்கள் பயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு தோட்டக்காரர்கள் வெடிமருந்து வைத்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் கொல்லத்தில் இதேபோல் வாயில் காயத்தோடு சுற்றிவந்த மற்றொரு பெண் யானையும் இறந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
கொல்லம் மாவட்டம், பதானபுரம் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று வாயில் கடுமையான காயத்தோடு சுற்றி வந்தது. தனது யானைக் கூட்டத்தில் சேராமல் விலகி தனியே வலியோடு சுற்றி வந்த அந்த யானை, கடந்த மாத இறுதியில் இறந்து போனது. இதைத் தொடர்ந்து பதானபுரம் வனச்சரக அதிகாரிகள் அதன் வாய்ப் பகுதியில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அந்த யானை வெடிவைக்கப்பட்ட பழத்தையோ அல்லது வெடி வைக்கப்பட்ட வேலியையோ தொட்டதில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பேரிலேயே அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கர்ப்பிணி யானை வெடி வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில் பாலக்காடு எஸ்.பி. சிவவிக்ரம் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளில், பதானபுரம் யானைக்கும் வெடி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் இந்த யானை இறப்புக்கும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.