கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்ட சூழலிலும் ஊழியர்களுக்குப் பிடித்தமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும் என்று மார்ச் மாதம் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும். அவ்வாறு நிறுவனங்கள் ஊதியம் முழுமையாக கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அதுகுறித்த விவரங்களை தங்களுடைய பேலன்ஸ்ஷீட்டில் தெரிவித்து கணக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம் வரும் 12-ம் தேதி வரை முழு ஊதியம் தராத நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டது.
லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி அறிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை கடந்த மாதம் 15-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த இரு வாரங்களுக்கு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து, மத்திய அரசு பதில் அளிக்கக் கோரியிருந்தது. இந்த சூழலில் மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றதாகத் தகவல் வெளியானது.
இந்த சூழலில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே. கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “கடந்த மார்ச் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமானது அல்ல. அதேசமயம், அந்த உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நோக்கம் லாக்டவுன் காலத்தில் ஒப்பந்த ஊழியர்களும், தொழிலாளர்களும் ஊதியமில்லாத சூழலுக்கு ஆட்படக்கூடாது என்பதற்காகவே எடுக்கப்பட்டது.
பொதுநலன் கருதி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தேசிய நிர்வாகக்குழு எடுத்த முடிவாகும். இந்த உத்தரவைப் பிறப்பிக்க தேசிய நிர்வாகக் குழுவுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் முழுமையான ஊதியத்தை தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் வழங்க முடியாத சூழலில் இருந்தால் பரவாயில்லை. அதற்கான ஆதாரங்களை அதாவது தங்களால் ஊதியம் வழங்க முடியாத சூழலில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரத்தை நிறுவனங்கள் தங்களின் பேலன்ஸ்ஷீட்டிலும், வரவு செலவுக் கணக்கிலும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே. கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கூறுகையில், “ஊழியர்கள், தொழிலாளர்கள் ஊதியமில்லாமல் இருந்துவிடக்கூடாது என்ற கவலையும் இருக்கிறது. ஆனால், தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அவர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத சூழல் இருப்பதையும் காண முடிகிறது.
ஆதலால், அரசுத் தரப்பும், மனுதாரர்களும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும். வரும் ஜூன் 12-ம் தேதி வரை நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கக்கூடாது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.