சர்வதேச சபாநாயகர்கள் மாநாட்டில் ஜம்மு - காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய பாகிஸ்தான், இது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு கோரியது. அதனை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.
ஐ.நா.வின் ர்வதேச சபாநாயகர்கள் மாநாட்டில், பாகிஸ்தான் சார்பில் கலந்துகொண்ட ஜாவித் அப்பாசி பேசும்போது, "ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களுக்கான உரிமையை பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஐ.நா. தலைமையில் சுதந்திரமான பாரபட்சமற்ற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு காஷ்மீருக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய ஜாவித் அப்பாசியின் பேச்சை முற்றிலுமாக நிராகரித்த, இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தாலிவர் சுமித்ரா மகாஜன், "ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அம்மாநில மக்கள் பல வருடங்களாக ஜனநாயக முறைப்படி ஆட்சியார்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதுவே அங்கு இருக்கும் ஜனநாயகத்துக்குச் சான்று.
இல்லாதப் பிரச்சினையை இருப்பதாக, காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் தொடர்ந்து எழுப்பி வருகிறது.
மாநாட்டின் கொள்கையில் நாட்டம் காட்டாமல், அவர்களது நாட்டு மக்களின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டாமல், மற்ற நாட்டு மக்கள் மீது அக்கறை காட்டுவதாக பாகிஸ்தான் தேவையில்லாமல் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம்" என்றார் சுமித்ரா.
சர்வதேச நாடாளுமன்ற கூட்டமைப்பு (ஐ.பி.யு.) 1889-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஐ.நா. சபையில் நிரந்தர பார்வையாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு சார்பில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சிய இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அதன்படி அடுத்த புதிய இலக்குகளை நிர்ணயிப்பது தொடர்பாக ஐ.பி.யு. சார்பில் சர்வதேச சபாநாயகர்களின் 3 நாள் மாநாடு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் நடைபெறும் இம்மாநாட்டில் 170 நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.