இந்தியா

விற்பனைக்கு தடை விதிக்கப்படும் பொருட்கள் பட்டியலில் குளறுபடி- ஆயுதப்படை கேன்டீன் அதிகாரி இடமாற்றம்?

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் ‘தற்சார்பு இந்தியா’ அழைப்பை தொடர்ந்து, மத்திய ஆயுதப்படை கேன்டீன்கள் அனைத்திலும் ஜூன்1 முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 13-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, விற்பனைக்கு தடை விதிக்கப்படும் வெளிநாட்டு பொருட்களின் பட்டியலை, ஆயுதப்படை கேன்டீன்களை நடத்தும் கேந்திரிய போலீஸ் கல்யாண் பாந்தரின் (கேபிகேபி) தலைமை செயல் அதிகாரியான டிஐஜி ஆர்.எம்.மீனா, கடந்த மே 29-ம்தேதி தயாரித்தார். 1,026 பொருட்களுக்கான இந்தப் பட்டியலில் தவறுதலாக தாபர் இந்தியா, பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ், விப்ரோ, ப்ளூஸ்டார் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் பொருட்களும் இடம்பெற்றிருந்தன. இந்தக் குளறுபடி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்தப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தப் பிரச்சினையை உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பட்டியலில் உள்நாட்டுப் பொருட்கள் இடம்பெற்றது குறித்து விசாரணை நடந்து வருகிறது. புதிய பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சிஆர்பிஎப்டிஜஜியான ஆர்.எம்.மீனா தற்போது அயல் பணியில், கேபிகேபி தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் சிஆர்பிஎப்-க்கு அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT