விஷவாயு கசிந்து 12 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே முழு பொறுப்பேற்க வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்.ஆர் வெங்கடாபுரத்தில் உள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன நிறுவனத்தில் கடந்த மே 7-ம் தேதிஅதிகாலையில் திடீரென ஸ்டெரைன் வாயு கசிந்து பரவியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சுவாசப்பை, தோல் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதைத் தொடர்ந்து, எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தை உடனடியாக மூடக் கோரியும் அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதுகுறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. இந்தக் குழு பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டது. மேலும், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டது. சுற்றுப்புற கிராமங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிர்கள் சேதமடைந்ததையும், காற்று மாசு ஏற்பட்டதையும் கண்டறிந்தது.
பின்னர் மனித தவறுகளாலும், எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் அலட்சிய போக்காலும்தான் வாயு கசிவு சம்பவம் நடந்தது என அக்குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதுகுறித்து அந்நிறுவனமும் தனது தரப்பில் மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், விஷ வாயு தாக்கி 12 பேர் உயிரிழந்ததற்கும், சுற்றுச் சூழல் மாசடைந்ததற்கும், அப்பகுதி பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனமே முழு பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், முன் பணமாக பாலிமர்ஸ் நிறுவனம் செலுத்திய ரூ.50 கோடியை தற்காலிக அபராத தொகையாக மட்டுமே ஏற்கப்படும். மத்திய சுற்றுச்சூழல் மேம்பாட்டுத்துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையம் ஆகிய துறைகளின் கீழ் அமைக்கப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டுஇறுதி அபராதத் தொகையை முடிவு செய்யும் என்றும் தேசியபசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.