இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சுரங்கப் பாதைக்குள் சிக்கித் தவித்த 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் சுரங்கத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மீட்புப் பணியை கண்காணித்த தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் ஜெனரல் ஓ.பி.சிங் நேற்று கூறியதாவது:
சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்ட மணி ராம் மற்றும் சதீஷ் தோமர் ஆகிய இருவரிடன் இருப் பிடத்தை 17-ம் தேதி கண்டுபிடித் தோம். அவர்களுக்கு குடிநீர், உலர் பழங்கள், குளுக்கோஸ் ஆகியவை வழங்கப்பட்டன. அவர்களுடன் வெப்கேமராவுடன் இணைக்கப்பட்ட மைக்ரோபோன் மூலம் மீட்புக் குழுவினர் தொடர்புகொண்டு அவ்வப்போது பேசி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருக்கும் பகுதியில் சுரங்கப் பாதையின் மீது துளையிட்டு, அதற்குள் நுழைந்து 2 தொழி லாளர்களையும் மாலை 4.30 மணிக்கு பத்திரமாக மீட்டோம். அவர்கள் சோர்வாக காணப் பட்டனர். ஆனால் பேசும் நிலையில் இருந்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேநேரம் சிக்கிய மற்றொரு நபரான ஹிர்தயா ராம் எங்கு இருக் கிறார் என்று தெரியவில்லை. மீட்புக் குழுவினர் அவரை தேடி வருகின்றனர். எனினும், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது.
சிம்லா அருகே கிரத்பூர்-மணாலி விரைவு சாலை திட்டத் தின் ஒரு பகுதியாக 1.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலை யில் கடந்த 12-ம் தேதி திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 3 தொழிலா ளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களை மீட்பதற்காக மீட்புப் படையினர் கடுமையாக போராடினர். 50 பொறியாளர்கள் அடங்கிய குழு, தொழில்நுட்ப கண்காணிப் பாளர்கள், துளையிடும் நிபுணர்கள், சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம், எல்லை சாலை நிறுவனம், இமாச்சலப் பிரதேச மின்சக்தி கழகம் உள்ளிட்ட நிறுவனத்தின் புவியியல் வல்லுநர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
இயந்திரக் கோளாறு காரண மாக வெள்ளிக்கிழமை மீட்புப் பணி தடைபட்டது. எனினும் சனிக்கிழமை மீண்டும் பணி தொடங்கியது. இதற்கி டையே கனமழை பெய்ததால் பணி பாதிக்கப்பட்டது. ஒரு வழியாக 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு 2 பேரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.