இந்தியாவின் கடன் தரத்தை 22 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவின் கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் நிறுவனம் முதல்முறையாகக் குறைத்துள்ளது.
குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, அழுத்தம், நிதிச்சிக்கல் போன்றவை ஆட்சியாள்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரேட்டிங் நிறுவனம் என்றால் என்ன?
உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தரநிர்ணய நிறுவனங்கள் இருந்தாலும், மூடிஸ், எஸ்அன்ட்பி, பிட்ச் ஆகிய மூன்று சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு அளிக்கும் மதிப்பீடுதான் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படுகிறது.
எந்த முதலீட்டாளரும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன் தாங்கள் முதலீடு செய்யப்போகும் நாட்டுக்கு மூடிஸ், பிட்ச், எஸ்அன்ட்பி போன்ற நிறுவனங்கள் அளி்த்துள்ள கிரேட்(தரம்) என்ன என்பதை கவனித்து ஆய்வு செய்தபின்புதான் முதலீடு செய்வார்கள். இந்த கிரேட் வழங்குவதில் பல்வேறு ரகங்கள் உள்ளன.
ஒரு நாட்டில் முதலீடு செய்தால் அது லாபமாக திரும்பி வருமா, முதலீட்டுக்குப் பாதுகாப்பு இருக்குமா, முதலீடு இழப்பில் இல்லாமல் இருக்குமா, எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை திரும்பப்பெறும் வகையில் இருக்குமா என்ற அடிப்படையில் பல்வேறு கிரேடுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிறுவனங்கள் வழங்கும் கிரேடின் அடிப்படையில் ஒரு நாடு வெளிநாடுகளில் கடன் பெறுவதும் எளிதாகும். கிரேடு அதாவது தரம் மோசமாக இருந்தால் கடன் கிடைப்பதும் குறையும், கடனுக்கான வட்டியும் அரசுக்கு அதிகமாக இருக்கும். அதுவே தரம் உயர்வாக இருந்தால் எளிதாக ஓர் அரசால் கடன் பெறலாம், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.
அந்த வகையில் இந்தியாவுக்கு இதற்குமுன் பிஏஏ2 என்ற ரேட்டிங்கை மூடிஸ் நிறுவனம் வழங்கியிருந்தது. ஆனால், கரோனா லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார முடக்கம், கடந்த சிலஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் போன்றவற்றால் பிஏஏ3 என்று தரத்தை குறைத்துள்ளது
இதற்கு முன் கடந்த 1998ம் ஆண்டு இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபின் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ3 என மூடிஸ் குறைத்தது. அதன்பின் குறைக்காமல் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது அரசில் எடுக்கப்பட்ட பல்வேறு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கையால் நம்பிக்கையடைந்த மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ2 என 2018-ம் ஆண்டு உயர்த்தியது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளதார வளர்ச்சிக் குறைவு, சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கம், மந்தநிலை, அதிகமான கடன், நிதிப்பற்றாக்குறையை சரிசெய்யாதிருத்தல் போன்றவற்றால் பிஏஏ3 என இந்தியாவின் தரத்தைக் குறைத்துள்ளது.
இதன் மூலம் முதலீடு செய்வற்கு ஏற்ற நாடுகளில் கடைசி வரிசையில் இருக்கும் நாடுகளுக்கு அளிக்கும் தரமும், முதலீடு செய்வதில் சிலஇடர்கள் இருப்பதைக் காட்டும், குறுகியகாலக் கடனை மட்டும் செலுத்தும் 10-வது வரிசைத்தரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது..
இந்த ரேட்டிங் குறைப்பால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது என்றால், முதலீடு செய்ய விரும்பும் முதலீ்ட்டாளர்கள் ரேட்டிங் குறைப்பால் சற்று அச்சப்பட்டு முதலீடு செய்வதை தள்ளிப்போடலாம், பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டை பாதிக்கும், வெளிநாடுகளில் இந்திய அரசு கடன் பெறும்போது அதிகமான வட்டிவிதிக்கப்படும்.
மூடிஸ் நிறுவனம் தனது ரேட்டிங் குறைப்பிக்கு அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்னும் சிறிது காலத்துக்கு குறைந்த பொருளாதார வளர்ச்சி, அரசின் நிதிநிலையில் சிக்கல் உருவாகுதல், நிதிப்பற்றாக்குறை, நிதித்துறையில் அழுத்தம் போன்றவை உருவாகும் என்பதால் ஆட்சியாளர்கள், அமைப்புகள் புதியக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதில் பெரும் சவாலை வரும் காலங்களில் எதிர்கொள்வார்கள் என்று மூடிஸ் கணித்துள்ளது.
இந்த தரக்குறைப்பால் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பில் ஆழ்ந்த அழுத்தம் ஆதிக்கம் செலுத்தும், எதிர்மறையான அபாயங்களை பிரதிபலிக்கும். இதன் மூலம் நீண்டகாலத்துக்கு நிதித்துறையில் பெரும் அழுத்தம் உருவாகும்
கரோனா வைரஸ் தொற்று உருவாவதற்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் செய்வதில் சுணக்கம், கொள்கைகளை செயல்படுத்துவதில் கட்டுப்பாடு போன்றவற்றால் இந்தியாவின் இயல்பைவிட வளர்ச்சிக் குறைந்தது. இந்த வளர்ச்சிக் குறைவால் இந்தியாவின் கடன்பெறும் அளவில் பாதிப்பு ஏற்படுத்தி, நிதிஅமைப்பில் அழுத்தத்தை உண்டாக்கியது. இது ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியது.
பிரதமர் மோடி தலைமையில் அரசு வந்தபின் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை வேகமாகச்செயல்படுத்தியதால் நம்பிக்கையடைந்து கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ2 என உயர்த்தினோம்.ஆனால் அவை தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை.
கரோனா வைரஸ் தொற்றுநோயை அடிப்படையாக வைத்துதான் இந்தியாவின் மதிப்பீட்டைக் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் அது தொற்று நோயின் தாக்கத்தால் எடுக்கப்படவில்லை. மாறாக கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவின் கடன்பெறும் தரத்தில் உள்ள பாதிப்புகளை அதிகரிக்கிறது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் குறையும்.
இந்தியாவின் கடன் ரேட்டிங்கை உயர்த்துவது எதிர்காலத்தில் விரைவாக இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் வலுவடைந்து, அதன் வெளிப்பாடு சிறப்பாக இருந்து, பொருளாதார வளர்ச்சி இயல்புக்கு வரும்போதுதான் குறிப்பாக நிதிச்சூழல், நிதிநிலை ஸ்திரமடையும்போதுதான் மீண்டும் பரிசீலி்க்கப்படும்
இவ்வாறு மூடிஸ்தெரிவித்துள்ளது