பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்; ஆனால், பணமதிப்பிழப்பு, லாக்டவுனில் பறிபோன உயிர்கள் திரும்பி வருமா? சிவசேனா கேள்வி

பிடிஐ

தேசம் இன்றுள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தவி்ர்க்க முடியாத தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, லாக்டவுனில் அப்பாவிகள் உயிரிழந்தார்களே அந்த உயிர்கள் திரும்பி வருமா, எப்படி தவறுகளைத் திருத்தப்போகிறார்கள் என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது

பாஜக தலைமையில் மத்தியில் அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று முதலாமாண்டு பாராட்டுத் தெரிவித்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பல்வேறு குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசம் இன்றிருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர் அவசியம். இந்தியா நல்வாய்ப்பாக நரேந்திர மோடி போன்ற தலைவரைப்பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு விவகாரங்களைச் சமாளிக்கவும், திறம்பட செயலாற்றவும் வலிமையான தகுதியான தலைவர் பிரதமர் மோடிதான். பிரதமர் மோடி தவிர்க்க முடியாத தலைவர் அவருக்கு இணையாக யாரும் இல்லை.

பிரதமராக இருந்து மோடி பல நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளாக தவறுகள் நடந்துள்ளன, பாஜக ஆண்ட கடந்த 6 ஆண்டுகளிலும் தவறுகள் நடந்துள்ளன.

கடந்த காலத்தில் நடந்த பலதவறுகளை மோடி சரிசெய்துள்ளார். குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370 பிரிவு நீக்கம், முத்தலாக் நீக்கம், ராமர் கோயில் கட்டுமானம் போன்றவற்றை மோடி செய்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத்தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் ஊரடங்கை மத்தியஅரசு கொண்டுவந்தது.இந்த லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த வேதனைகளைப் பார்க்கும் போது கடந்த 1947-ம் ஆண்டு இந்தியப் பிரிவினையின் போது மக்கள் அடைந்த துன்பத்தை நினைவுபடுத்தியது

இந்தத் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகிறீர்கள். இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக பிரதமர் மோடி போன்ற தலைவர் கிடைத்துவிட்டார். ஆனால், லாக்டவுனிலும், கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவந்த பணமதிப்புநீக்க நடவடிக்கையிலும் உயிரிழந்த அப்பாவி மக்களின் உயிர்களைத் திரும்ப கொண்டுவர முடியுமா?

பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள் வரலாறு என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்துதான் தொடங்குவதாக நம்புகிறார்கள். அதாவது பிரதமர் மோடிஆட்சி அமைந்ததிலிருந்துதான் வரலாறு தொடங்குவதாக நம்புகிறார்கள்.

சுதந்திரத்துக்காக இந்தியா போராடிய வரலாறு, தொழிற்துறை, சமூகம், அறிவியல், மருத்துவம் போன்றவற்றில் வளர்ந்ததில் வரலாறு படைக்கவில்லையா. 1971-ம் ஆண்டில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தானை உடைத்து அங்கிருந்து வங்கதேசத்தை உருவாக்கிக்கொடுத்தாரே அது வரலாற்று சாதனையில்லையா அல்லது வரலாற்றுத் தவறா?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைக் கொண்டுவந்தார், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தினார்கள். இவை அனைத்தும் தவறாக இருந்தால், இந்த தவறையெல்லாம் பாஜக தலைவர்கள் எவ்வாறு சரிசெய்யப்போகிறார்கள்.

கடந்த 70 ஆண்டுகள் ஆட்சியில் அடல்பிஹாரி வாஜ்பாய் பிரமதராக ஐந்தரை ஆண்டுகள் ஆண்டுள்ளார். விபிசிங், சந்திரசேகர் இருவரும் தலா 2 ஆண்டுகள் ஆண்டுள்ளார்கள். அப்படியென்றால் கடந்த 70 ஆண்டுகள் எல்லாம் வீணாகிவிட்டதா, இந்தியா கடந்த 2014-ம் ஆண்டிலிருந்துதான் வளர்ந்ததா?

கடந்த காலத்தில் 60 ஆண்டுகளாக வீர சவாரக்கரை அவமானப்படுத்திவிட்டார்கள், அவரின் தியாகத்தைப் போற்றவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ஏன் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. அந்த பழைய தவறு ஏன் சரிசெய்யப்படவில்லை

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை இரண்டையும் பாஜக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சாதனையாகக்கூறி வருகிறது.உண்மையில் இரு நடவடிக்கையால்தான் பொருளாதாரம் சீரழிந்தது, வேலைவாய்ப்புகள் பறிபோனது.

சீனா-இந்தியா எல்லையில் பிரச்சினை தொடங்கியுள்ளது, நேபாளம் நமது நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது. இவையெல்லாம் தற்சார்பு பொருளாதாரம், வலிமைக்கு அடையாளம் அல்ல

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT