அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என் வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான உம்பன் புயல், மேற்கு வங்கத்தை தாக்கி பெரும்சேதம் ஏற்படுத்தியது. இந்நிலையில் அரபிக்கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து ஜூன் 3-ம் தேதி காலையில் மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரைப்பகுதிகளை சென்றடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக மும்பையில் உள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "புயல் சின்னம் காரணமாக லட்சத்தீவு, கேரளா, கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் (மே 31, ஜூன் 1) லேசான அல்லது கனமழை பெய்யக்கூடும். ஜூன் 1 , 2 ஆகிய தேதிகளில் கொங்கண் பகுதி, கோவா ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். வடக்கு கொங்கண் மண்டலம், மகாராஷ்டிராவின் வடக்கு மத்திய பகுதி ஆகிய இடங்களில் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளிலும், தெற்கு குஜராத், டாமன், டையு, தாத்ரா நாகர் ஹவேலி உள்ளிட்ட இடங்களில் ஜூன் 3-ம் தேதியும் பலத்த மழை பெய்யும்" என கூறப்பட்டுள்ளது.