நீதித்துறை மீதான பெருகும் சகிப்பின்மை சமூக ஊடகங்களால் தூண்டப்படுகின்றன என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார்.
“நீதிபதிகள் எடுக்கும் முடிவுகள் மீது குற்றச்சாட்டுகள், புகார்கள் கற்பிக்கப்படுகின்றன. விமர்சனங்கள் வரம்பு மீறும் போது நீதித்துறை எனும் நிறுவனத்துக்கு கடும் சேதம் விளைவிக்கப்படுகிறது.
விமர்சனங்களும் தகவல்கள்தான் ஆனால் அவை வரம்புக்குள் இருக்கும் போதுதான் வரம்புகள் கடக்கப்படும்போது அது தவறான தகவல்களாகி விடும். இது அமைப்புக்கு நல்லதல்ல. ஒவ்வொரு அமைப்பையும் சந்தேகித்தால் அமைப்பே இருக்காது அராஜகம்தான் இருக்கும்.” என்கிறார் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.
மெட்ராஸ் பார் அசோசியேஷன் மற்றும் எம்பிஏ அகாடமி இணைந்து நடத்திய ‘கோவிட்-19 காலக்கட்டத்தில் கருத்துச் சுதந்திரம், போலிச் செய்திகள், தவறான தகவல்கள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தன் ஆன்லைம் சொற்பொழிவாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார் சஞ்சய் கிஷன் கவுல்
சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை தானாகவே முன் வந்து வழக்காக எடுத்த அமர்வில் சஞ்சய் கிஷன் கவுல் ஒரு நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஆட்சியதிகாரத்தை நீதிபதிகள் கண்டித்தால் சில பேர் நீதிபதிகளுக்கு நடுநிலை சான்றிதழ் வழங்குகின்றனர்’ என்று பேசினார்.
இந்நிலையில் சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாமல் சமூக ஊடகங்களை முறைப்படுத்துவது பெரிய போராட்டம்தான் என்றார். மேலும் போலிச்செய்திகள் பெருத்து விட்டன என்றார். சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் செய்திகள் எந்த வித யோசனையும் இல்லாமல் ஃபார்வர்ட் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
மொத்தத்தில் ஒட்டுமொத்த சகிப்பின்மையும் எல்லை மீறி போகிறது. தங்கள் மதத்துக்கும், நம்பிக்கைக்கும் சிறிதாக ஏதாவது எதிராக நடந்தாலும் மக்கள் கோர்ட் நோக்கி வருகின்றனர்.
“நமக்கு தோதாக இல்லாத விஷயங்கள், கருத்துக்கள் மீது நமக்கு சகிப்பின்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் நடுநிலை வழி என்பது பலியாகியுள்ளது. எப்போதும் கருப்பும் வெள்ளையுமாக பட்டவர்த்தனமாக இருக்காது சில கிரே பகுதிகளும் உண்டு. ஜனநாயகத்தின் அடிப்படையே மற்றவர்கள் கருத்தையும் மதிப்பதாகும். எதிர்க்கருத்துக்கள் வைத்திருப்பவர்கள் இருதரப்பினரும் ஒருவரையொருவர் ‘மோடி பக்த்’ என்றும் ‘நகர்ப்புற நக்ஸல்’ என்றும் பரஸ்பரம் அழைத்துக் கொள்கின்றனர். இருதரப்பினருக்கும் சகிப்புத்தன்மை இல்லை” என்கிறார் நீதிபதி கவுல்.