கரோனா வைரஸால் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழலால் நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளையும், ஐடிபிஐ வங்கியின் பங்குகளையும் விற்பனை செய்ய இருந்த திட்டத்தை மத்திய அரசு 2021-ம் ஆண்டுமார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிதியமைச்சர் நிர்மலா சீதாாரமன், விடுத்த அறிவி்ப்பில் முதலீட்டு விலக்கல் மூலம் ரூ.2.10லட்சம் கோடி நடப்பு நிதியாண்டில் திரட்ட அரசு திட்டமி்ட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதில் குறிப்பாக அரசின் வசம் இருக்கும் எல்ஐசியின் பங்குகளை விற்று ரூ.90 ஆயிரம் கோடி திரட்ட அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிட்தக்கது.
ஆனால் கரோனா வைரஸால் கடந்த இரு மாதங்களாக நாட்டில் பொருளாதார சூழல் மந்தமாகி, வளர்ச்சி சரிந்து, பங்குச்சந்தையிலும் மந்தமான போக்கு நிலவுகிறது. இந்த நேரத்தில் எல்ஐசி பங்குகளை அரசு விற்பனை செய்தால், எதிர்பார்த்த அளவுக்கு பணம் மத்திய அரசுக்கு கிடைக்காது என்பதால் பங்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்தியஅரசு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே அரசின் பெட்ரோலிய நிறுவனமான பிபிசிஎல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் பங்குகலை விற்பனை செய்ய மத்தியஅரசு முடிவு செய்து அந்த காலக்கெடுவும் இருமுறை நீட்டிக்கப்பட்டு ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி தவி்ர்த்து ஐடிபிஐ பங்குகளையும் பங்குகளையும் விற்க இருந்த தி்ட்டத்தையும் மத்திய அரசுஒத்திவைத்துள்ளது. கடந்த 13 காலாண்டுகளாக இழப்பி்ல் சென்று வந்த ஐடிபிஐ வங்கி, கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் முதல் முறையாக ரூ.135 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் ஐடிபிஐ வங்கி ரூ.4,918கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில் இந்த முறை ரூ.135 கோடி லாபம் ஈட்டியுள்ளது
பங்குசந்தையின் சூழல் சரியில்லை, பங்குகளுக்கும் எதிர்பார்த்த விலை கிடைக்காது என்பதால், ஐடிபிஐ, எல்ஐசிபங்குகள்விற்பனை இப்போதைக்கு இருக்காது எனத் தெரிகிறது