கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாகத் தொடங்கும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பாக இன்று தொடங்கிவிட்டதாக தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய வானிலை மையத்தின் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். ஜூன் 1-ம் தேதி தொடங்கவே வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகள், ஆந்திரா ஆகியவற்றுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும்.
கத்திரி வெயில் தொடங்கி நாடு முழுவதும் வெயில் முடிந்தபின்பும் சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேசமயம், உள்மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பச் சலனத்தால் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ம் தேதி அறிவித்துள்ளது.
பின்னர் வங்கக்கடலில் உருவான உம்பன் புயலாலும் அரபிக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாலும் தென்மேற்குப் பருவமழை வழக்கமான நாளான ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.
இந்த சூழலில் கடந்த 15-ம் தேதி தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் விடுத்திருந்த அறிவிப்பில், “மே 28-ம் தேதியே கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்தக் கணிப்பு வழக்கமாக பருவமழை தொடங்கும் ஜூன் 1-ம் தேதிக்கு மேல் 2 நாட்கள் தாமதமாகவோ அல்லது 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கலாம்” எனத் தெரிவித்திருந்தது
அதன்படி ஸ்கைமெட் இன்று ட்விட்டரில் விடுத்த அறிவிப்பில், ''கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு முன்கூட்டியே 30-ம் தேதியே பருவமழை தொடங்கிவிட்டது. பருவமழை தொடங்கியதற்கான அறிகுறிகளான மழைப்பொழிவு, ஓஎல்ஆர் மதிப்பு, காற்றின் வேகம், ஆகியவை சரியாக இருக்கிறது. இறுதியாக 4 மாத மழைக்காலத் திருவிழா தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்கைமெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜதின் சிங் கூறுகையில், “கேரளாவில் பருவமழை தொடங்கியதற்கான அனைத்துக் காரணிகளும் சரியாகப் பொருந்திவிட்டன. ஓஎல்ஆர், மழை, காற்று வேகம் சரியாக இருப்பதால் பருவழை தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்திய வானிலை மையமோ, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்கவில்லை. அதற்கான காரணிகள் பொருந்தி வரவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் பொதுச்செயலாளர் மிருதுன்ஜே மொகபத்ரா கூறுகையில், “கேரளாவில் தென் மேற்குப் பருவமழை இன்னும் தொடங்கவில்லை. அதற்கான காரணிகள் பொருந்தி வரவில்லை” எனத் தெரிவித்தார்.
பருவமழையைத் தீர்மானிக்கும் 3 காரணிகள் என்ன?
பருவமழையைத் தீர்மானிக்க மூன்று வகையான காரணிகள் உள்ளன. மே 10-ம் தேதிக்குப் பின் கேரளாவில் உள்ள 14 வானிலை மையங்களான மனிகாய், அமினி, திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், குடகு, மங்களூரு ஆகியவற்றில் தொடர்ந்து இரு நாட்களுக்கு மேலாக 2.5 மில்லிமீட்டருக்கு மேல் பெய்திருந்தால் பருவமழை செட்டாகிவிட்டது.
2-வதாக மேற்கிலிருந்து வரும் காற்று 600 ஹெக்டோபாஸ்கஸ் (ஹெச்பிஏ) இருத்தல் வேண்டும், மூன்றாவதாக அவுட்வேவ் லாங்வேவ் ரேடியேஷன் சதுர கிலோ மீட்டருக்கு 200 வாட்டுக்குக் கீழ் இருத்தல் வேண்டும். இந்த மூன்று காரணிகளும் பொருந்தினால் பருவமழை தொடங்கிவிட்டதாக கணக்கில் கொள்ளப்படும் என இந்திய வானிலைமையம் தெரிவிக்கிறது.