இந்தியா

சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரூ.1,000, உணவுப் பொருள்கள்- உ.பி. அரசு வழங்குகிறது

செய்திப்பிரிவு

வெளிமாநிலங்களில் வேலைபார்த்து வந்த உ.பி. தொழிலாளர்கள், ஊரடங்கினால் தம் வீடுதிரும்புகின்றனர். இவர்கள் எண்ணிக்கை உத்தரபிரதேசத்தில் 27 லட்சத்தை தாண்டியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யும்உ.பி. அரசு அவர்களை தேவைக்குஏற்றவாறு முகாம்களிலும், அவர்களது வீடுகளிலும் தனித்திருக்க அனுப்பி வைக்கிறது.

14 நாட்கள் வரை தனிமைப்படுத்துதலால் எந்த பணியும் செய்ய முடியாமல் குடும்பத்துடன் பட்டினிக்கு உள்ளாகும் சூழல் உருவாகிறது. இதைத்தடுக்க, உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தனித்திருத்தல் முடிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவுப் பொருட்களுடன் ரூ.1,000 அளிக்க முடிவு செய்துள்ளது. இதை அவர்களது மாவட்ட நிர்வாகம் மூலமாக அளிக்க உள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட இதற்கான அறிவிப்பில் மே 31-ம்தேதிக்கு முன்பாக அனைத்துமாவட்டங்களும் தொழிலாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தஉதவித்தொகை அத்தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். வங்கி கணக்குகள் இல்லாதவர்களுக்கு அதை துவங்கிய பின் அளிக்கப்பட உள்ளது.

தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பெயர், விலாசம் மற்றும் கைப்பேசிகளின் எண்களை நிவாரண ஆணையர் அலுவலக இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதை அவர்களது மாவட்ட ஆட்சியர் சரிபார்த்து இறுதிப் பட்டியலை உறுதி செய்ய உள்ளார். ஆர்.ஷபிமுன்னா


SCROLL FOR NEXT