யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவேன் என்று தீவிரவாதி டைகர் மேமன் தனது தாயிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை மும்பை போலீஸ் மறுத்துள்ளது.
1993 மார்ச் 12-ம் தேதி மும்பையில் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு களில் 257 பேர் உயிரிழந்தனர். 700 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு தப்பி விட்டனர். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.
உரையாடல் விவரம்
அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 30-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு டைகர் மேமன் மும்பையில் உள்ள தனது தாயார் ஹனீபா வீட்டில் தரைவழி தொலைபேசியை தொடர்பு கொண்டார். இந்த தொலைபேசி உரையாடலை உளவுத் துறையினர் இடைமறித்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம்:
தொலைபேசியை முதலில் எடுத்த நபர், டைகர் மேமனின் குரலை உடனடியாக அடையாளம் கண்டறிந்து கொள்கிறார்.
அப்போது டைகர் மேமன், அம்மா விழித்திருக்கிறார்களா என்று கேட்க அந்த நபர், கடந்த இரண்டு நாட்களாக அம்மா தூங்கவில்லை என்கிறார். கார்டுலெஸ் தொலைபேசியை தாயாரிடம் கொடுக்குமாறு டைகர் மேமன் கூறுகிறார்.
முதலில் தொலைபேசியை வாங்க மறுக்கும் தாயார், பின்னர் பெற்றுக் கொள்கிறார். எதிர்முனை யில் டைகர் மேமனின் குரலைக் கேட்டதும் ஹனீபா அழுகிறார். 35 விநாடி மவுனத்துக்குப் பிறகு டைகர் மீண்டும் பேசுகிறார்.
யாகூப் மேமனின் மரணத்துக்கு பழிவாங்குவேன் என்று தாயாரிடம் அவர் உறுதி கூறுகிறார். அதற்கு அவரது தாயார், ஏற்கெனவே ஒரு மகனை இழந்துவிட்டேன், இனிமேலும் யாரையும் இழக்க விரும்பவில்லை, வன்முறையை விட்டுவிடு என்று கூறுகிறார்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாத டைகர் மேமன், குடும்பத் தினரின் கண்ணீர் வீண் போகாது, நான் நிச்சயமாக பழிவாங்குவேன் என்று மீண்டும் கூறுகிறார். பின்னர் முதலில் தொலைபேசியை எடுத்த நபர், ஹனீபாவிடம் இருந்த போனை பெற்றுக் கொள்கிறார். அவரிடம் குடும்பத்தினர் எல்லோரை யும் கவனித்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை டைகர் துண்டித்துவிடுகிறார்.
மொத்தம் 3 நிமிடங்கள் டைகர் மேமன் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை உளவுத் துறையினர் கண்டறிய முயற்சி செய்தனர். ஆனால் அந்த தொலைபேசியின் ஐ.பி. மாறிக் கொண்டே இருந்ததால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மும்பை போலீஸ் இணை கமிஷனர் தேவன் பார்தி கூறியபோது, டைமர் மேமனின் தொலைபேசி உரையாடலை நாங்கள் இடைமறித்துக் கேட்க வில்லை என்று மறுத்துள்ளார்.