இந்தியா

மேலும் 12 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து: மத்திய அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வெட்டுக்கிளி பாதிப்பு கர்நாடகா உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வெட்டுகிளிகள் பெரிய அளவில் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ் தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்தன. இவை உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன.

ராஜஸ்தானில் பார்மர், ஜோத்பூர், நாகவுர், பிகானீர், கங்காநகர், ஹனுமன்கர், சிகார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங் களிலும் மத்திய பிரதேசத்தில் சத்னா, குவாலியர், ராஜ்கர், பைதுல், தேவாஸ் ஆகர் மால்வா ஆகிய மாவட்டங்களிலும் தற் போது வெட்டுக்கிளிகள் கூட்டம் பெருந்திரளாக காணப்படுகிறது.

இது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. உணவுப் பயிர்களை வெட்டுக்கிளி கள் நாசம் செய்து வருவதால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வெட்டுக்கிளி களை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவவும் மத்திய வேளாண் அமைச்சகம் முன்வந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக 89 தீயணைப்பு படைகள், 120 கண்காணிப்பு சாதனங்கள், ஸ்பிரே சாதனத்துடன் கூடிய 47 கட்டுப் பாட்டு வாகனங்கள் மற்றும் 810 டிராக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்படும் வரை இப்பணி தொடரும்.

இதனிடையே வெட்டுக்கிளி பாதிப்பு கர்நாடகா, தெலங்கானா, உத்தரகண்ட், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய விவசாய அமைச்சகம் எச்சரித்துள்ளது. அனேகமாக ஜூன் 15-ம் தேதி வாக்கில் இந்த தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு முன்பே சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய விவசாய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT