கரோனா வைரஸ் தீவிரமாகப்ப பரவி வரும் நிலையில் ரயில்நிலையங்களிலும், ரயில்வே நடைமேடைகளிலும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் போன்றவற்றை திறக்கக்கூறி எங்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். அதற்காக நாங்கள் இன்னும் தயாராகவில்லை என ரயில்வே வாரியத்துக்கு விற்பனையாளர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி ரயில்வே சிற்றுண்டிக்கடைகள், உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 1-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் , டெல்லியிலிருந்து 15 சிறப்பு ராஜ்தானி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 100 ஜோடி ரயில்கள் இயக்கப்படஉள்ளன.
இதைக் கருத்தில்கொண்டு கடந்த 21-ம் தேதி ரயில்வே வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது.அதில் “ நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகளைத் திறக்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.
ஆனால், அனைத்துப் பயணிகளும் பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதியில்லை இதற்கு மண்டல மேலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தது.
ரயி்ல்வே வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அகில பாரதிய ரயில்வே கான்-பான் லைசன்ஸ் கூட்டமைப்பு (ரயில்நிலைய உணவ விற்பனையாளர்கள் நலகூட்டமைப்பு) தலைவர் ராவேந்தர் குப்தா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில் “ யாருமே நீண்டநாட்களாக கடைகளை பூட்டி வைத்து வியாபாரம் பார்்க்காமல் இருக்க விரும்ப மாட்டார்கள், வீட்டில் அமைதியாக இருக்க மாட்டார்கள். ஆனால் கடைகளை திறப்பதற்கு ஏதுவான சூழல் அமைய வேண்டும்.
ரயில்நிலையங்களிலும், ரயில்வே நடைமேடைகளிலும் உணவகங்களையும், சிற்றுண்டிக் கடைகளையும் திறப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. சிவப்பு மண்டலங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இதுவரை சந்தித்திராத சூழலை எதிர்கொள்கிறோம்.
உணவகங்கள், சிற்றுண்டிகளில் பணியாற்றிய பல்வேறு வெளிமாநிலத்தவர்கள் லாக்டவுன் காரணமாக சொந்த மாநிலம் சென்றுவிட்டனர். நடைமேடைகளில் கடைகளைத் திறந்தால் கடையின் உரிமையாளருக்கும், பொருட்களுக்கம் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் இல்லை, பாதுகாப்பு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது
ஷ்ராமிக் ரயில்களில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைமேடைகளில் இருக்கும் கடைகளை உடைத்து திருடுவதும், அங்குள்ள பொருட்களை எடுத்துச்செல்வதும் தொடர்ந்து வருகிறது. அங்கு கடையத் திறந்துவைத்தால், அங்கு பணியாற்றும் ஊழியருக்கு பாதுகாப்பு இருக்குமா, பொருட்களை இழந்தால் இழப்பீடு தருவீர்களா?
ஆதலால் ரயி்ல்வே நிலையங்களிலும், ரயில்வேநடை பாதைகளிலும் உணவகங்கள்,சிற்றுண்டிகள் திறப்பதற்கு போதுமான காலஅவகாசம் தர வேண்டும் எனக் கேட்கிறோம்.
கடைகளைத் திறக்கூறி அதிகாரிகள் மூலம் அழுத்தம் கொடுப்பதும், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பேசி கடைகளை திறக்கக் கோருவதையும் தவிர்க்க வேண்டும். சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட உள்ள நிலையில் உணவங்களை இப்போது திறப்பதில் அர்த்தமாகஇல்லை.
ஜூன் 1-ம் தேதி முதல் 100 ஜோடி ரயில்கள்இயக்கப்பட உள்ளன. ரயில் சேவ முழுமையாக வந்து, சூழல் இயல்புக்கு வராத நிலையில் சில பயணிகளுக்காக உணவகங்களைத் திறப்பது கடினம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது