பிஹாரில் கரோனா தனிமை மையங்கள் படுமோசமாக இருப்பதை 9 புலம்பெயர் தொழிலாளர்கள் வீடியோ எடுக்க அவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு தொடர்ந்ததையடுத்து நிதிஷ் குமார் அரசு மீது காங்கிரஸ் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தது.
காங்கிரஸ் தலைவர் ரஞ்ஜித் ரஞ்சன் என்பவர் இது தொடர்பாகக் கூறும்போது, “கோவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் நாட்டின் ஏழை மக்களும் தொழிலாளர்களும் இந்த நாட்டில் நமக்கு எந்த உரிமைகளும் என்பதை உணர்ந்திருப்பார்கள். பிஹாரில் உள்ள தனிமை மையங்கள் நரகத்தை விட மோசமாக இருக்கின்றன. புலம்பெயர்ந்தோர் தங்கள் உரிமைகளை கேட்கும் போது அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள், இது என்ன நீதி?
பிஹாரில் அரசு தனிமை மையங்களில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை.” என்று சாடினார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர் மோசமான நிலை குறித்து வீடியோ எடுத்ததோடு தாங்களாகவே தனிமை மையத்தை மாற்றிக் கொண்டனர்.
எந்த தனிமை மையமாக இருந்தாலும் சரி என்று அவர்களுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் கடைசியில் இதைக் காரணமாகக் காட்டி அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது பிஹாரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.