இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் சிறிய சம்பவங்கள்தான், ரயில்வேயை குறை கூறுவதா?: பாஜக தலைவரின் சர்ச்சைப் பேச்சு

பிடிஐ

ஸ்ரமிக் சிறப்பு ரயில்களில் தங்கள் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் சிறியதுதான், தனித்தனியாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் சர்ச்சைக்கருத்து தெரிவிக்க திரிணமூல் கட்சியினர் சீறியுள்ளனர்.

கடந்த திங்கள் முதல் ஸ்ரமிக் சிறப்பு ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர், குழந்தைகள் உட்பட வெப்பம், பசி,தாகம் தாளாமல் இறந்துள்ளனர். இது குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறும்போது,

“துரதிர்ஷ்டவசமான சில சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. இதற்காக ரயில்வே நிர்வாகத்தைக் குறை கூறுவதா? அவர்களால் முடிந்ததைச் செய்கின்றனர். சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன, ஆனால் இவை தனித்தனியான அசம்பாவிதங்களே.

ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு எவ்வளவு சிறப்பாக சேவையாற்றுகிறது என்பதற்கு நம்மிடையே உதாரணங்கள் உள்ளன. சிலபல சிறிய சம்பவங்கள்தான் நிகழ்ந்துள்ளன. இதற்காக ரயில்வேயை இழுத்து மூடிவிட வேண்டுமா என்ன?” என்று பேசியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சுக்கு திரிணமூல் தரப்பிலும் சிபிஎம் தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் மொகமது சலீம் கூறும்போது, “பாஜக ஆட்சியில் நடப்பவையெல்லாம் நல்லவற்றுக்கே என்ற மாய உலகத்தில் பாஜக தலைவர் இருக்க விரும்புகிறார்.

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையில் மோடி அரசு தோல்வி தழுவி விட்டது, மனித உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மத்திய அரசின் தோல்விக்காக பாஜக தலைவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது” என்று சாடியுள்ளார்.

SCROLL FOR NEXT