இந்தி நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப தனிப்பட்ட முறையில் பெருமளவில் உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் ஆகியவற்றையும் வழங்கி வருகிறார். கரோனா வைரஸ் பரிசோதனைக்கான கருவிகளையும் வழங்கியிருப்பதுடன் மும்பையில் தனக்கு சொந்தமான இடத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, சோனு சூட்டை தொலைபேசியில் அழைத்து அவரது செயலுக்காக பாராட்டி உள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உதவி செய்வதற்காக சோனு சூட்டை பகத்சிங் கோஷ்யாரி பாராட்டியதாக ஆளுநர் சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள சோனு சூட், ஆளுநரின் பாராட்டு ஊக்கமளிப்பதாகவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சேரும் வரை தனது பணி தொடரும் என்றும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் சோனுவை பாராட்டி உள்ளார்.