கோப்புப்படம் 
இந்தியா

கரோனாவால் நாடு முழுவதும் தனிமை முகாமில் 23 லட்சம் பேர்: மத்திய அரசு தகவல்

பிடிஐ

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், மாநிலங்களுக்கிடையே இடம் பெயர்ந்தோர் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் தனிமை முகாம்கள், வீடுகள் போன்றவற்றில் ஏறக்குறைய 23 லட்சம் பேர் கரோனா பரவல் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநிலத்தில் அரசின் தனிமை முகாமில் கண்டிப்பாக 7 நாட்கள் இருக்க வேண்டும், அதில் கரோனா இல்லை எனத் தெரிந்தால் மீதமுள்ள 7 நாட்கள் வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஏற்பாடு செய்துள்ள தனிமை முகாமில் 22.81 லட்சம் பேர் தனிமையில் இருந்தனர். கடந்த 12 நாட்களுக்கு முன் இது 11.95 லட்சமாக இருந்தது. 11 நாட்களில் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 6.02 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்ததாக குஜராத்தில் 4.42 லட்சம் பேர் தனிமை முகாமில் உள்ளனர். இதில் கடந்த 14-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் 2.9 லட்சம் பேரும், குஜராத்தில் 2 லட்சம் பேரும் மட்டுமே தனிமையில் இருந்த நிலையில் 12 நாட்களில் இரு மடங்காகியுள்ளது.

லாக்டவுன் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் மூலமும், பேருந்து மூலமும் நேற்று வரை 91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றுள்ளனர்.

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களைத் திரும்ப அழைத்துவரும் வந்தே பாரத் மிஷனில் இதுவரை 30 ஆயிரம் இந்தியர்கள் 40 நாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். 60 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ள தனிமை முகாமில் 14 நாட்கள் தங்கியிருந்து கரோனா இல்லை எனத் தெரிந்தபின் இதுவரை பல லட்சம் மக்கள் கடந்த 14-ம் தேதிக்கு முன்பாக சொந்த ஊர் சென்றுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகபட்சமாக இதுவரை 3.6 லட்சம் பேர் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர். அடுத்ததாக பிஹாருக்கு 2.1 லட்சம் பேர் சென்றுள்ளனர். கடந்த 14-ம் தேதி நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் 2.3லட்சம் பேரும், பிஹாருக்கு 1.10 லட்சம் பேரும் சென்றிருந்தனர்.

கடந்த 26-ம் தேதி நிலவரப்படி சத்தீஸ்கரில் 1.86 லட்சம் பேர் தனிமை முகாமில் உள்ளனர். அதைத் தொடர்ந்து ஒடிசாவில் 1.18 லட்சம் பேர், ஜார்க்கண்டில் 88,536 பேர், பஞ்சாப்பில் 37,168 பேர், ஜம்மு காஷ்மீரில் 30,983 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 25,238 பேர், ராஜஸ்தானில் 19,418 பேர், ஆந்திராவில் 14, 930 பேர், அசாமில் 13,941 பேர், லடாக்கில் 13,538 பேர் தனிமை முகாமில் உள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT