பாஜக மூத்த செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா : கோப்புப்படம் 
இந்தியா

பாஜக செய்தித்தொடர்பாளருக்கு கரோனா தொற்று ? டெல்லி மருத்துவமனையில் அனுமதி

பிடிஐ

பாஜகவின் மூத்த செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சம்பித் பத்ராவுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், அவர் குர்கோவினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன

பாஜகவின் மூத்த செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் சம்பித் பத்ரா. காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளித்து தனது இருப்பை வெளிக்காட்டி வந்தார்.

குறிப்பாக ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு சம்பித் பத்ரா அறியப்பட்டார். கடந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காணொலி வாயிலாக உரையாடி மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார நிதித் திட்டம் குறித்துக் கேட்டறிந்தார்.

மிகவும் பரபரப்பாக இருந்துவரும் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுவது, நேரடியாக பேட்டிகள் அளிப்பது என அறிந்த முகமாக இருந்து வருகிறார் .

இந்நிலையில் சம்பித் பத்ராவுக்கு கரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் போன்றவை உள்ளன. இதையடுத்து, அவர் உடனடியாக குர்கோவனில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்களில் இதுவரை யாரும் கரோனாவில் பாதிக்கப்படவில்லை. சம்பித் பத்ராவுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை சம்பித் பத்ராவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், கடந்த சில நாட்களாக பத்ராவுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த பாஜக தலைவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.

SCROLL FOR NEXT