வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கண்காணிக்க ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரோன் கேமராவை விவசாயத்துறையினர் பயன்படுத்துகின்றனர்.
வெட்டுகிளிகள் பெரிய அளவில் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
26 ஆண்டுகள் கழிந்து கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்தது. அங்கு மட்டும் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிப்படைந்தது.
பாகிஸ்தானில் வெட்டுக்கிள்கள் படையெடுத்து உணவு தானியங்களை அழித்து விட்டு, தற்போது மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் நுழைந்து உணவு பயிர்கள் சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான பணிகளை வேகப்படுத்தாவிட்டால் பெரும் பாதிப்புகள் உண்டாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையடுத்து வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கண்காணிக்க ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரோன் கேமராவை விவசாயத்துறையினர் பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து அம்மாநில விவசாயத்துறை ஆணையர் பிரகாஷ் சவுத்திரி கூறுகையில் ‘‘வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. தற்போது ட்ரோன் கேமராவை பயன்படுத்துகிறோம். ஜெய்ப்பூரின் புறநகர் பகுதியான சாம்டோ உள்ளி்டட இடங்களில் வெட்டுக்கிளிகள் வருகை இருப்பதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.’’ எனக் கூறினார்.