கேரளத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அறிவித்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளத்தில் தூய்மை தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
கேரளத்தில் கரோனா தொற்று முன்பைவிட வேகமாகப் பரவி வரும் நிலையில், தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து அதுகுறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
அதன்படி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
“கேரளாவில் நேற்று புதிதாக 40 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 10 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 8 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 7 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 4 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 3 பேர் வயநாடு, பத்தனம்திட்டா மாவட்டங்களையும், தலா 2 பேர் எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள். ஒருவர் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவர்களில் 28 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 9 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. நேற்று நோய் குணமடைந்தவர்களில் 6 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 2 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், தலா ஒருவர் ஆலப்புழா, வயநாடு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்.
கரோனா தொற்றால் இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் கேரளாவைச் சேர்ந்த 173 பேர் இறந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரின் துக்கத்தில் கேரளாவும் பங்குகொள்கிறது. கேரளாவில் நோய்த் தொற்றுப் பரவல் அதிகம் இள்ள இடங்களாக பாலக்காடு மாவட்டத்தில் 10 இடங்கள், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3 இடங்கள் என மேலும் 13 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து, நோய்த் தீவிரமுள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் தற்போது கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிப்பதற்காக காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. கூட்டத்தில், வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க முடியாத நிலை உள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமையைத் தூய்மை தினமாக கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை அன்றைய தினம் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். பொது இடங்களில் தூய்மைப்படுத்தும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கேரளாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,004 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 445 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,06,940 பேர் வீடுகளிலும், 892 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். புதிதாக கரோனா அறிகுறிகளுடன் 229 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அரசு தனிமை முகாம்களில் கட்டணம் வசூலிப்பது குறித்து தவறான தகவல் பரவியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக 7 நாட்கள் அரசு முகாம்களில் தங்கி இருக்க வேண்டும். பணம் கொடுக்க வசதி உள்ளவர்களிடமிருந்து மட்டுமே பணம் வசூலிக்கப்படும். தற்போது கேரளாவில் பெரும்பாலான துணிக்கடைகள், ரெடிமேட் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ரெடிமேட் கடைகளில் ஆடைகளை அணிந்து பார்க்கும் பழக்கம் உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் இவ்வாறு ஆடைகளை அணிந்து பார்ப்பதால் நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு கடைக்காரர்கள் அனுமதிக்கக்கூடாது.
கடந்த 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 78, 894 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் விதிமுறைகளை மீறியதாக 468 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத் தொற்று வந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோய் பரவும் நிலை உள்ளது. எனவே, வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால் அவர்கள் 14 நாட்கள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. குடும்ப உறுப்பினர்கள் அவருடன் நெருங்கிப் பழகக்கூடாது. சுகாதாரத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு நோய் பரவாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கேரளத்தில் இன்று (வியாழன்) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. மதுக்கடைகள் முன் போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். வரும் 31-ம் தேதி ஏராளமான அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற உள்ளனர். இதை முன்னிட்டு அவர்களுக்கு வழியனுப்பு விழா உட்பட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.”
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.