கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் சிக்கி வேலையிழந்து, துன்பத்துக்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சொந்த மாநிலம் சென்றபோது 7 பேர் பல்வேறு நகரங்களில் உயிரிழந்தது நேற்று தெரியவந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்து, கொடும் வறுமைக்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். அவர்களைச் சொந்த மாநிலங்களில் கொண்டு சேர்ப்பதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் இயக்கி வருகிறது.
இந்த ரயில்கள் செல்லும்போது தாகத்துக்கு குடிநீர் வாங்க முடியாமலும், உணவு கிடைக்காமலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பட்டினியோடு செல்கின்றனர். ரயில்வே துறை சார்பில் உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டாலும் அதுபோதுமானதாக இல்லை. சிறப்பு ரயில் பயணத்தில் மட்டும் 7 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக நேற்று செய்திகள் தெரிவிக்கின்றன.
4 பேர் பிஹார் சென்ற ரயிலிலும், 3 பேர் உத்தரப் பிரதேசம் சென்ற ரயிலிலும் உயிரிழந்துள்ளனர்.
இதில் பிஹாரின் முசாபர்பூரில் 35 வயதுப் பெண் உரேஷ் கட்டூன் ரயில்வே நடைபாதையில் உயிரிழந்து கிடக்கும்போது, அந்தப் பெண்ணின் மகனான சின்னஞ்சிறு பாலகன், தனது தாய் இறந்தது கூட தெரியாமல் எழுப்புவதும், படுத்திருக்கும் போர்வைக்குள் செல்லும் காட்சியும் வீடியோவாக சமூக வலைதலங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்த கவலையை அதிகப்படுத்தியது.
மற்றொரு உயிரிழப்பு என்பது டெல்லியிலிருந்து பிஹாரின் முசாபர்பூருக்கு சிறப்பு ரயிலில் தந்தையும், நான்கரை வயது மகனும் வந்தனர். அப்போது முசாபர்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கியபோது, அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சிறுவன் கடும் வெயிலால் உயிரிழந்தார் என்று ரயில்வே துறை தெரிவித்தது.
ஆனால் பசியால் இறந்தார் என்றும், பால் வாங்கக்கூட கையில் பணமில்லை என்றும் அந்தச் சிறுவனின் தந்தை தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிஹாரின் தனாப்பூருக்கு மும்பையிலிருந்து சிறப்பு ஷ்ராமிக் ரயில் வந்தது. அதில் பயணித்த 70 வயது முதியவர் பாஷித் மகாத்தோ என்பவர் மாரடைப்பு காரணமாக மிஹார் மற்றும் சாட்னா இடையே ரயில் வந்தபோது உயிரிழந்தார் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இதேபோல சூரத்-ஹாஜிபூர் இடையே சென்ற சிறப்பு ஷ்ராமிக் ரயிலில் 58 வயது நிரம்பிய புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அதன்பின் உயிரிழந்தவர் குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்தபோது பிஹாரின் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பூஷன் சிங் என்று தெரியவந்தது என முசாபர்பூர் எஸ்.பி. தேவேந்திர நாத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில், மும்பையிலிருந்து வாரணாசிக்கு புதன்கிழமை சென்ற ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் மாற்றுத்திறனாளிகள் இருவர் ரயிலிலேயே உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்தபோது அவர்கள் தஸரத் பிரஜாபதி (வயது 30), ரத்தன்கவுட் (வயது 60) எனத் தெரியவந்தது. இதில் பிரஜாபதி ஏற்கெனவே சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டிருந்தார் என்றும், ரத்தன் கவுட் முதுமை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்தார் என்பதும் தெரியவந்தது.
மேலும், உத்தரப் பிரதேசம் சாஹர் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் நேற்று வந்தபோது அதில் பஹாரியாச் நகரைச் சேர்ந்த ஷேக் சலிம் (வயது 45) உயிரிழந்து கிடந்தார். அவரின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார் அவர் கரோனாவால் உயிரிழந்தாரா என்பது குறித்த உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்களில் 7 பேர் பல்வேறு நகரங்களில் ரயிலில் செல்லும்போதே உயிரிழந்துள்ளனர் என்பது நேற்று தெரியவந்தது.
புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் செல்லும்போது அவர்களுக்குப் போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல் உயிரிழப்பதாக குற்றச்சாட்டு வந்தாலும் அதை ரயில்வே மறுக்கிறது.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ரயில்களில் உயிரிழந்த 7 பேரும் ஏற்கெனவே பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்தவர்கள். அவர்களுக்குப் போதுமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் சிறப்பு ரயில்களில் பயணித்தபோது உயிரிழந்துள்ளனர். மே 26-ம் தேதி வரை ரயில்வே சார்பில் 78 லட்சத்து 11 ஆயிரத்து 575 உணவுப் பொட்டலங்கள் இலவசமாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 830 தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.