ஆந்திர மாநிலம் நகரி நகராட்சி ஆணையர் தாக்குப்பட்ட விவகாரம் தொடர்பாக, தடை உத்தரவை மீறி தர்ணாவில் ஈடுபட முயன்ற எம்எல்ஏ ரோஜா நேற்று கைது செய்யப்பட்டார்.
சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோஜா உள்ளார். இந்த நகராட்சி மன்றத்தின் தலைவி யான சாந்த குமாரியும் அதே கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த நகராட்சி மன்றத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர், நகராட்சி ஆணையரை சாந்த குமாரியின் மகன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆணையர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் சாந்தகுமாரியின் மகனை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா தலைமையில் நகரியில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் ரோஜா தலைமையில் கட்சித் தொண்டர் கள் பல இடங்களில் இருந்து நகரிக்கு வர முயன்றனர். இவர் களை ஆங்காங்கே போலீஸார் கைது செய்தனர். மேலும், பலமனேர் எம்எல்ஏ அமர்நாத் ரெட்டி, வேப்பஞ்சேரி எம்எல்ஏ நாராயணசாமி, புங்கனூர் எம்எல்ஏ பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி, சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ரோஜாவை தமிழக-ஆந்திர எல்லையில் சத்திரவாடா பகுதி யில் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் பேசும்போது, "அமைதி யான முறையில் ஊர்வலம் நடத்தவே நாங்கள் திட்டமிட்டிருந் தோம். ஆனால் முதல்வரின் உத்தரவின்பேரில் போலீஸார் வேண்டுமென்றே எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர். பெண்களின் பிரச்சினைக்காக விரைவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபடப் போகிறேன்" என்றார்.