இந்தியா

வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உதவி வாக்குவங்கியை மேம்படுத்த முயலுகிறதா காங்கிரஸ்?

ஆர்.ஷபிமுன்னா

வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உதவி வாக்குவங்கியை மேம்படுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களான உத்திரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை குறி வைத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் தேசிய அளவில் அமலான ஊரடங்கில் அதிக அளவில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலவகைகளில் கைவிடப்பட்டவர்கள் பல நூறு கி.மீ நடந்தே தம் வீடு சேரும் துயரநிலை நிலவுகிறது.

இவர்களில் நூற்றுக்கணக்கான உயிர்களும் பலியாகி வருகின்றன. இந்த சூழலில் அவர்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி சற்று தாமதமாக முடிவு செய்து களம் இறங்குவதாகக் கருதப்படுகிறது.

கடந்த வாரம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் சார்பில் இதற்காக, 18 மாநிலங்களின் கட்சி தலைவர்களுடன் காணொலிக் கூட்டம் நடத்தப்பட்டது. தேசியப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால், இதற்கு தலைமை வகித்தார்.

இதில் பேசியவர், வெளிமாநிலங்களில் சிக்கியத் தொழிலாளர்கள் தங்கள் வீடு திரும்புவது உள்ளிட்ட உதவிகளை செய்வதால், கட்சியின் வாக்குவங்கியை பலப்படுத்த முடியும் என யோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் காங்கிரஸ் தலைமையக வட்டாரம் கூறும்போது, ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவரத்தின்படி நாடு முழுவதிலும் சுமார் 4 கோடி தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கு 2 மாத ஊரடங்கால் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளில் நாம் உதவி கட்சியை தூக்கி நிறுத்த முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. மிகவும் தாமதமான

யோசனையாக இது. இதன் மீதான கருத்துக்கள் எங்களிடம் இருந்தும் பெறப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘காங்கிரஸ் மித்ர்(தோழன்)’ எனும் பெயரில் ஒரு செயலி அக்கட்சியின் மற்றொரு பொதுச்செயலாளரான பிரியங்கா வத்ராவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், காங்கிரஸார் ஒவ்வொரு மாநிலம்வாரியாக தொழிலாளர்களுக்கு உதவத் துவங்கி உள்ளனர்.

இதற்கு முன்பாக லாக்டவுன் காலகட்டத்தில் ஏழைகளுக்கு உதவ, ‘ராகுல் பிரியங்கா காந்தி சேனா’ எனும் பெயரிலும் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ராகுல் பிரியங்கா காந்தி சேனாவின் செய்தித்தொடர்பாளருமான அர்ஜுன்புரி கூறும்போது, ‘ஊரடங்கு துவங்கியது முதல் டெல்லி, உபி மற்றும் பிஹார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநில நகரங்களில் அங்காங்கே முகாம்கள் அமைத்து ஏழைகளை தங்க வைத்து உணவளித்து வருகிறோம்.

மே 1 முதல் அமலான மத்திய அரசின் அறிவிப்பிற்கு பின் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வீடு திரும்ப ரயில், பேருந்துகளில் கட்டணமாகவும், ரொக்கமாக அளித்து உதவி வருகிறோம். எனத் தெரிவித்தார்.

இதனிடையே, சேவா தளம், மஹிளா காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸின் மற்ற பிரிவுகள் லாக்டவுன் காலகட்டத்தில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு அதன் தலைமை, புதிதாகத் துவங்கப்பட்ட ராகுல் பிரியங்கா காந்தி சேனாவிற்கு முன்னுரிமை வழங்குவது காரணம் எனவும் புகார் நிலவுகிறது.

SCROLL FOR NEXT