உ.பி.யின் பைசாபாத்தில் ‘கும்நாமி பாபா’ என்ற பெயரில் வாழ்ந்த சாது ஒருவரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று கூறுவது தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந் நிலையில் மக்களின் நம்பிக்கையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கு சமாஜ்வாதி கட்சி அரசு நேற்று ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
உ.பி.யில் அயோத்தியும் பைசா பாத்தும் இரட்டை நகரங்களாக உள்ளன. இதில் எங்கிருந்தோ வந்து பைசாபாத்தில் சுமார் 15 ஆண்டு கள் வாழ்ந்தவர் பகவான்ஜி. சாதுவை போல் தோற்றம் அளித்தா லும் இவர் கோயில்களுக்கு அடிக் கடி செல்லமாட்டார். தோற்றத்தில் நேதாஜியை போல் இருந்த இவரது நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருந் துள்ளன. இதனால் அவரை ‘கும்நாமி (காணாமல் போனவர்) பாபா’ என அழைத்து வந்தனர்.
இவர் கடந்த 1985-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி இறந்த பின், அயோத்தியின் சரயு நதிக் கரையில் அவரது இறுதிச் சடங்கு கள் நடந்தன. பிறகு அவர் தங்கி யிருந்த பைசாபாத், ராம்பவனில் உடைமைகளை சோதனையிட்ட போது, பாபாவின் பல கடிதங் கள் கிடைத்தன. இதை தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநர் பி.லால் ஆய்வு செய்து, அவை நேதாஜியின் கையெழுத்துடன் ஒத்துப்போவ தாகக் கூறினார். எனினும் பாபாவின் அறையிலிருந்து கிடைத்த பற்கள் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட்டு அது நேதாஜியுடையது அல்ல எனக் கூறப்பட்டுவிட்டது.
எனவே நேதாஜி மறைந்த மர்மம் குறித்து ஆராய்ந்த நீதிபதி மனோஜ் முகர்ஜி தலைமையிலான குழுவும் அவரை நேதாஜி என ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. பிறகு, கும்நாமி பாபா தான் நேதாஜியா என விசாரிக்கப்பட வேண்டும் எனக் கேட்டு நேதாஜி யின் மகள் லலிதா போஸ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம் இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என உ.பி. அரசுக்கு கடந்த 2013, ஜனவரி 31-ம் தேதி உத்தரவிட்டது.
இதனால் பாபா மீதான சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், அவரை நேதாஜி என நம்பும் பைசாபாத்வாசிகளின் கோரிக் கையை உ.பி. அரசு ஏற்றுக்கொண் டுள்ளது. இதன்படி பைசாபாத்தில் ராம் கதா சங்ராலாயா எனும் இடத்தில் கும்நாமி பாபாவுக்கு மாநில அரசு நினைவிடம் கட்ட உள்ளது. இந்த நினைவிடம் வரும் ஜனவரி 23-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக உ.பி. சட்டப்பேரவை யின் மழைக்காலக் கூட்டத் தொட ரில் தற்போது தாக்கல் செய்யப்பட் டுள்ள துணை நிதிநிலை அறிக்கை யில் சமாஜ்வாதி அரசு ரூ. 1.5 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நினைவிடத்தில் கும்நாமி பாபா பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் சமாஜ்வாதி அரசின் இந்த முடிவுக்கு அயோத்தி முஸ்லிம்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து அயோத்தியின் மூத்த பத்திரிகையாளர் அர்ஷத் அப்சல் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கும்நாமி பாபா எனும் பெயரில் வாழ்ந்தவர்தான் சுபாஷ் சந்திர போஸ் என உறுதி செய்யப்படா மல் அவருக்கு நினைவிடம் கட்டுவது சரியல்ல என்பதே எதிர்ப்புக்கு காரணம். அந்த தொகை யில் இங்கு வாழ்ந்த முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்களான மௌல்வி அஹமது அலி ஷா, அஷ் வாக்குல்லா கான் ஆகியோருக்கு நினைவிடம் எழுப்ப வேண்டும் எனக் கூறுகின்றனர்” என்றார்.
கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி நேதாஜி தனது உதவி யாளருடன் கடைசியாகப் பயணம் செய்த விமானம் தைவானில் விபத் துக்குள்ளானது. அதில் தீக்காயம் அடைந்த நேதாஜி அருகிலுள்ள ஜப்பான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கருதப்பட்டது. இதில் அவரது உடலும் கிடைக்காததால் நேதாஜி யின் குடும்பத்தினர் இதை இன்று வரை நம்பவில்லை. ஜப்பான் நாட்டு அரசும் அன்றைய தினத்தில் எந்த விமான விபத்தும் நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தது.