இந்தியா

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு: முதல்வர் உத்தவ் தாக்கரே சரத் பவாருடன் சந்திப்பு- அரசு கவிழாது என சஞ்சய் ரவுத் தகவல்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனாகூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.

கரோனா வைரஸ் நோயால் மகாராஷ்டிர மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில்தான் உச்சகட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியை திடீரென சந்தித்துப் பேசினர். இதனால் மகாராஷ்டிராவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. சிவசேனா தலைமையிலான அரசை கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜகவும், மத்திய அரசும் முயல்வதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரைநேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு மிகவும் வலுவாக உள்ளது. அரசு கலைந்து விடும் என்று சிலர் சொல்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். கூட்டணி அரசு வலுவாக உள்ளது. இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆளுநர் கோஷ்யாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதில் எந்த அரசியலும் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT