இந்தியா

வணிக சங்கங்கள் அனுப்பிய புகார் கடிதம் எதிரொலி; இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும்தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துங்கள்: பிரதமர் மோடியிடம் ஐஎல்ஓ இயக்குநர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தொழிலாளர் சட்டங்களை அனைத்து மாநிலங்களும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

தொழிலாளர் சட்டங்களை சில மாநிலங்கள் சமீபத்தில் அவசரசட்டம் மூலம் நிறுத்தி வைத்துள்ளன. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இது தொடர்பாக பிரதமர் மோடி அந்தந்த மாநிலங்களுடன் கலந்து பேசி ஒரே சீரான தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்த வழியேற்படுத்த வேண்டும் என்று ஐஎல்ஓ இயக்குநர் கைய் ரைடர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் இதை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா பாதிப்பில் இருந்து தொழில்களை மீட்டெடுக்க தொழிலாளர்கள் சட்ட விதிகளில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்,குஜராத் உட்பட சில மாநில அரசுகள் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளன. இதனால் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் நாட்டின் முன்னணி வணிக சங்கங்கள் சர்வதேச தொழிலாளர் நல அமைப்புக்கு புகார் கடிதம் எழுதியுள்ளன.

இந்தக் கடிதம் ஐஎல்ஓ அமைப்பின் தொழிற்சங்க பிரிவின் தலைவர் காரென் குர்டிஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலையிடுமாறு அவர் ஐஎல்ஓ இயக்குநரைக் கேட்டுக் கொண்டதன் பேரில், ஐஎல்ஓ இயக்குநர் கைய் ரைடர் , பிரதமருக்கு தனது அதிருப்தியை கடிதம் மூலம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே தொழிற்சங்கங்கள், மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டங்கள் குறித்து போதிய ஆதாரங்களை திரட்டி அதை ஐஎல்ஓ அமைப்பிடம்தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, உத்தராகண்ட், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிறப்பித்த அவசர சட்ட நகல்கள் மற்றும் அமைச்சரவை தீர்மான நகல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இது தவிர பிஹார் அரசு மற்றும் கர்நாடக அரசுகள் வெளியிட்ட உத்தரவுகள் மற்றும் மத்திய தொழிலாளர் துறை செயலர் வெளியிட்ட அறிக்கை நகல்களையும் தாக்கல் செய்ய உள்ளன.

பொதுவாக சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு வரும் புகார்கள் தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 109-வது கூட்டம் மே 25-ம்தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது இது அடுத்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT