மத்திய அரசின் நிதியுதவியை அதிகரிக்கும் வகையில் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் மத்திய திட்டமிடுதல் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜிங் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிஹார் எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் எழுப்பிய துணை கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கும் போது, “தற்போதைய நிலையில் எந்தவொரு மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் இல்லை. ஆனால் சிறப்பு நிதியுதவி அளிக்கும் யோசனை உள்ளது” என்றார்.
பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கைக்கு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான லோக் ஜன சக்தியும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் மாநிலங்களுக்கு திட்டச் செலவில் 90 சதவீதம் மத்திய அரசு அளிக்கிறது. மேலும் சிறப்பு நிதியுதவியும் தருகிறது.
அமைச்சர் மேலும் கூறும்போது, “கடந்த காலத்தில் சில மாநில அரசு கள் பல்வேறு துறைகளுக்கு சிறப்பு நிதியுதவி கேட்டுள்ளன. ஒட்டுமொத்த சமூக- பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளுக்கு சிறப்பு நிதி யுதவி அளிக்க வேண்டும் என 2015-16-ல் பிஹார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கோரிக்கை விடுத் துள்ளன” என்றார்.