ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நேரடியாகப் பணத்தை வழங்காவிட்டால் தீவிரமான பொருளாதார சீரழிவை நாடு சந்திக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு கவனக்குறைவாகச் செயல்பட்டால் கரோனா வைரஸின் 2-ம் கட்ட அலையை நாடு சந்திக்க நேரிடும். அது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட 4 கட்ட லாக்டவுனும் தோல்வி அடைந்துவிட்டன.
ஏழைகள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதியுதவியை வழங்காவிட்டால் நாடு தீவிரமான பொருளாதாரச் சீரழிவைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே பல நிறுவனங்கள் திவால் நிலைக்குச் சென்றுவி்ட்டன. ஆதலால் உடனடியாக இந்த நிறுவனங்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழை மக்கள் கையிலும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் பணத்தை மத்திய அரசு நேரடியாக வழங்காவிட்டால் ஆபத்தான பொருளாதாரச் சூழல் உருவாகும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது, கரோனாவை எதிர்த்துப் போராடும் மாநிலங்களுக்கு உதவ என்ன திட்டம் வைத்திருக்கிறது மத்திய அரசு என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
லாக்டவுனைத் தளர்த்துவதற்கு என்ன வகையான திட்டம் வைத்திருக்கிறார்கள், என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று நாங்கள் கேட்கிறோம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் என்ன வகையான ஆதரவை அளிக்கப்போகிறார்கள்.
நான் ஒன்றும் வல்லுநர் இல்லை என்றாலும், லாக்டவுனைத் தளர்த்துவதில் முறையான திட்டமிடல், வரைமுறை இருத்தல் அவசியம். அவசரப்பட்டு திறத்தல் கூடாது.
லடாக், நேபாளத்தில் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக சீனாவுடன் நாம் பகிர்ந்துள்ள எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு தெளிவாக மக்களுக்கு விளக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் கரோனா நோயாளிகள் அதிகரிப்பை அந்த மாநில அரசு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. அங்கு ஆளும் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவுதான் அளிக்கிறது, நாங்கள் ஆளவில்லை. ஆளும் அரசுக்கும், ஆதரவு அளிப்தற்கும் வேறுபாடு இருக்கிறது. எந்தவிதமான முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் காங்கிரஸ் இல்லை. ஆனால் மகாராஷ்டிர அரசை நாங்கள் ஆதரிப்போம்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.