கோப்புப்படம் 
இந்தியா

தாயைக் காண வேலையை உதறி இந்தியா திரும்பிய இளைஞர்: தனிமை முகாமில் இருந்தபோது தாய் இறந்ததால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் கதறல்

பிடிஐ

உடல்நலம் குன்றிய தனது தாயுடன் கடைசிக் காலத்தைச் செலவிடும் நோக்கில் ஐக்கிய அரசு அமீரகத்தில் தனது வேலையை ராஜினாமா செய்து நாடு திரும்பிய இளைஞர் அரசின் தனிமை முகாமில் இருந்தபோது அவரது தாய் இறந்தார். இதனால் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் இளைஞர் கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் ராம்பூரைச் சேர்ந்தவர் அமீர் கான் (வயது 30). இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அமீர் கானின் தாய் கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொடர்பான நோயால் அவதிப்பட்டதால், தாயுடன் நேரத்தைச் செலவழிக்க விரும்பிய அமீர் கான் துபாயில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து கடந்த 13-ம் தேதி சிறப்பு விமானத்தில் இந்தியா திரும்பினார்.

டெல்லி வந்த அமீர் கான் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தனிமை முகாமில் வைக்கப்பட்டார். முதலில் கட்டாயம் 14 நாட்கள் தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் அதன்பின் மாற்றம் செய்து அறிவித்தது. அதன்படி 7 நாட்கள் தனிமை முகாமில் இருந்தால் போதுமானது. அந்த 7 நாட்கள் காய்ச்சல், இருமல் போன்ற கரோனா அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் மீதமுள்ள 7 நாட்கள் வீட்டில் தனிமை முகாமில் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

அதன்படி தன்னுடைய 8-வது நாளில் அதிகாரிகளை அணுகிய அமீர் கான் 7 நாட்கள் முடிந்துவிட்டன. இனிமேல் தன்னுடைய வீட்டில் தனிமை முகாமில் இருக்கிறேன். வீட்டில் வயதான, நோய்வாய்ப்பட்ட தாய் இருக்கிறார் எனக் கூறியுள்ளார். ஆனால், அதிகாரிகளோ 14 நாட்கள் கண்டிப்பாக தனிமை முகாமில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அமீர் கானின் தாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்தத் தகவலைக் கேட்ட அமீர் கான் கதறிக் கண்ணீர் விட்டு, அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், விதிமுறைப்படிதான் செயல்பட முடியும் என்று தெரிவித்த அதிகாரிகள் அமீர் கானை அவரது தாயின் இறுதிச்சடங்கிற்குக் கூட செல்லவிடாமல் தடுத்துவிட்டனர்.

இதனால் தாயைக் காண வேலையை உதறிவிட்டு இந்தியா வந்தபோதும், தனிமை முகாமில் சிக்கிக்கொண்டு இறப்பில் கூட தாயின் முகத்தைக் காண முடியவில்லையே, இறுதிச்சடங்கு செய்ய முடியவில்லையே எனக் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். பின்னர் அவரை அங்கிருந்த போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த பிடிஐ நிருபர், தனிமை முகாமில் இருக்கும் அமீர் கானிடம் செல்போன் வாயிலாகத் தொடர்பு கொண்டார். அப்போது அமீர்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நுரையீரல் நோயோடு போராடி வரும் எனது தாயின் கடைசிக் காலத்தில் அவருடன் நேரம் செலவு செய்யவே துபாயில் எனது வேலைைய உதறிவிட்டு கடந்த 13-ம் தேதி இந்தியா திரும்பினேன். உண்மையில் நான் மார்ச் மாதம் வருவதற்காகத் திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், கரோனா லாக்டவுன் காரணமாக விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு பலமுறை சென்று எனது தாயின் உடல்நலத்தையும், எனது நிலையையும் கூறிப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய உதவி செய்யக் கோரினேன். கடைசியாக சிறப்பு விமானத்தில் டிக்கெட் பெற்று கடந்த 13-ம் தேதி டெல்லி வந்தேன்.

இந்திய அரசின் உத்தரவுப்படி தனிமை முகாமில் ஒரு தங்கும் விடுதியில் தங்கினேன். முதலில் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமை முகாமில் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. பின்னர் விதிமுறையில் மாற்றம் செய்து தனிமை முகாமில் 7 நாட்கள் பணம் செலுத்தியும், மீதமுள்ள 7 நாட்கள் வீட்டிலும் தனிமை முகாமிலும் இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

கடைசி 7 நாட்கள் தனிமை முகாமில் இருப்பவர் வீட்டில் துக்க சம்பவம் நடந்தாலோ, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உடன் இருந்தாலோ, வீட்டுக்குச் சென்று தனிமையில் இருக்கலாம் என அறிவித்திருந்தது. இதன்படி 7 நாட்கள் முடிந்ததும் 8-வது நாளில் அதிகாரிகளிடம் சென்று எனது தாயின் உடல்நிலை குறித்துக் கூறி வீட்டில் தனிமை முகாமில் இருக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துவிட்டது என்பதைத் தெரிவித்தேன்.

எனக்குப் பரிசோதனை செய்து அனுப்புங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கடந்த சனிக்கிழமை எனது தாய் காலமாகிவிட்டார். அவரின் இறுதிச்சடங்குக்குச் செல்ல அனுமதி தாருங்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது தனிமை முகாமில் இருக்கும்போது அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.

என் தாயுடன் அவரின் கடைசிக் காலத்தில் நேரம் செலவழிக்கவே இந்தியா வந்தேன். ஆனால், அவரின் இறப்பில் கூட அவரின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை.

கரோனா வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்தான். ஆனால், உணர்வுரீதியாக எனக்கு ஏற்பட்டது போன்ற இழப்பு மற்றவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் இருக்கும். எனது தாயைச் சந்திக்க மட்டுமே நான் இந்தியாவுக்கு வந்தேன். இப்போது என் தாய் இல்லை. இனிமேல் நான் எனது தாயைச் சந்திக்க முடியுமா?''

இவ்வாறு அமீர் கான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT