இந்தியா

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை எப்போது? - அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என டெல்லி மாநில அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுன் கொண்டுவரப்ட்டது. மே 31-ம் தேதி வரை லாக்டவுன் அமலில் உள்ளபோதிலும் சில கட்டுப்பாடுகள் தளர்வுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் லாக்டவுன் தளர்வை கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கின்றன. டெல்லியில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு பல்வேறு இடங்களில் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் மக்கள் வெளியே வரவும், கடைகளைத் திறக்கவும் டெல்லி அரசு அனுமதித்துள்ளது. பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் டெல்லி மக்கள் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி மாநில அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியதாவது:
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றே மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தகவலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

எந்த உத்தரவு வந்தாலும் அதனை ஏற்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். மெட்ரோ ரயில் சேவையை தொடங்க டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் தயாராக 2 நாட்களாவது அவகாசம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT