கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் இருக்கும் சீனர்களை தாயகம் அழைத்துச் செல்ல சீனா திட்டம்: பரிசோதனையில் அறிகுறிகளை மறைத்தால் தண்டனை

ஐஏஎன்எஸ்

இந்தியாவில் தங்கியிருக்கும் சீன மக்களைத் தாயகம் அழைத்துச் செல்வதற்காக சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ள சீன அரசு, அதுகுறித்த அறிவிக்கையை வெளியியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், தாயகம் திரும்ப விருப்பமுள்ள சீன மக்கள் வரும் 27-ம்தேதிக்குள் முன்பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகள், லடாக் எல்லையில் இந்திய ராணுவத்துடன் மோதல் போன்ற சூழல்களுக்கு மத்தியில் சீனா இந்தச் சிறப்பு விமானத்தை இயக்குகிறது.

இந்தியாவில் தங்கிப் படித்துவரும் சீன மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளவர்கள், இந்தியாவில் உள்ள சீன நிறுவனத்தில் பணியாற்றுவோர் தாயகம் திரும்புவதற்கு விமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காக கட்டணத்துடன் கூடிய விமானச் சேவை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு தனிக்கட்டணமும் விதித்து விமானம் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் மாண்டரின் மொழியில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிக்கை:

“இந்தியாவில் தங்கியிருக்கும் சீன மக்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களுக்காக சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. தாயகம் திரும்புவோர் விமானக் கட்டணம் செலுத்தி, தனிமைப்படுத்திக் கொள்ளவும் கட்டணம் செலுத்த வேண்டும். வரும் 27-ம் தேதிக்குள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

தாயகம் திரும்புவோர் டிக்கெட் பெற்று விமானத்தில் ஏறிவிட்டால் சீனாவில் மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான தனிமைப்படுத்தும் முகாம்கள், பரிசோதனைகளை ஏற்றுக்கொண்டுதான் விமானத்தில் பயணிக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளப்படும்.

பொதுமக்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, கரோனா அறிகுறி என சந்தேகிக்கப்படும் பயணிகள் அதாவது காய்ச்சல், இருமல் போன்றவை கடந்த 14 நாட்களில் இருந்தால், கரோனா நோயாளிகளுடன் பழகியவராக இருந்தால் விமானத்தில் பயணிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் உடல் வெப்பம் 37.3 டிகிரிக்கு அதிகரித்தால் விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படாமல், இந்திய மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

விமானத்தில் ஏறுவதற்கு முன் கடுமையான விதிமுறைகளும், பரிசோதனைகளும் செய்யப்படும். சீனப் பயணி யாரேனும் கரோனா அறிகுறிகளை மறைத்து, தனது முந்தைய கரோனா நோயாளிகளுடன் பழக்கத்தை மறைத்து, மாத்திரை, மருந்துகளை உட்கொண்டு பரிசோதனையிலிருந்து தப்பித்து பயணித்து சீனா வந்தபின் கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தியாவில் சீன நிறுவனங்களி்ல் பணியாற்றுவோர் தாயகம் திரும்பும் முன் அதற்குரிய தடையில்லாச் சான்று பெற்று வருதல் வேண்டும். சீன மக்கள் சீனா வந்து சேர்ந்தவுடன் அங்கு செய்யும் பிரத்யேக நியூசெலிக் ஆசிட் டெஸ்ட், ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அங்கு வந்தபின் சீன அதிகாரிகள் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக்கொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே எல்லையில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கும், விமானம் இயக்கி சீனர்களை தாயகம் அழைத்துச் செல்லும் சீனாவின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீனத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா அதிகரித்து வருவதால், சீன மக்கள் தாயகம் திரும்ப முடியாமல் இருப்பதால் அவர்களை அழைத்துச் செல்ல மட்டுமே விமானம் இயக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT