இந்தியா

விஷவாயு கசிவு சம்பவம்; எல்ஜி பாலிமர்ஸ் ஆலையை மூட ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு: இயக்குநர்கள் வெளிநாடு செல்லவும் தடை

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலையில் இருந்து கடந்த 7-ம் தேதி அதிகாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. விஷவாயுவை சுவாசித்த 12 பேர்உயிரிழந்தனர்.

மேலும் ஆலையைச் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல், தோல் பாதிப்பு, கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. பொதுநல மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்ஜிபாலிமர்ஸ் ரசாயன ஆலை வளாகத்தை மூட நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவினரைத் தவிரவேறு யாரையும் ஆலை வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆலையின் இயக்குநர்கள் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக் கூடாது. ஆலையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், அங்குள்ளபொருட்களை இடமாற்றம் செய்யக்கூடாது" என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 பொதுநல மனுக்களில்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின்படி, ஆலை சரியாக பராமரிக்கப்படவில்லையா, முறையான சுற்றுச் சூழல் அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டதா என்பது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT