கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியதில் இந்திய நாட்டுக்கும் உலக நாடுகளுக்கும் கேரளா முன்மாதிரியாகத் திகழ்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரத்தில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் பல சாதனைகளை எட்டியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், தொடர்ச்சியான இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மருத்துவச் சவால்களை எதிர்கொள்ளும்போதும் கூட பல முனைகளில் மாநிலத்திற்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள எல்டிஎஃப் அரசின் நான்காவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:
“கோவிட்-19 காரணமாக கேரளத்தில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல துறைகளில் கேரளாவின் முன்னேற்றத்துக்கு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளே காரணமாக உள்ளன. ஐந்து ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பல தடைகளை எதிர்கொண்டது. தொடர்ச்சியான இயற்கைப் பேரழிவுகள் இருந்தபோதிலும், வளர்ச்சிப் பணிகள் முடங்கவில்லை.
நவம்பர் 2017-ல் ஒக்கி சூறாவளி, மே 2018-ல் நிபா வைரஸ், ஆகஸ்ட் 2018-ல் நூற்றாண்டின் மிகப்பெரிய வெள்ளம் என எங்கள் கணக்கீடுகள் அனைத்தையும் பேரிடர்கள் புரட்டிப் போட்டன. ஆனால், உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் ஒன்றிணைந்து எங்களுக்கு உதவினார்கள். 2019-ல் மீண்டும் வெள்ளம் வந்தது. இந்த ஆண்டு கரோனா தொற்று. இந்த சவால்களை எல்லாம் சமாளிப்பது கடினம் என்றாலும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியதில் நாட்டுக்கும் உலகுக்கும் கேரளம் முன்மாதிரியாக விளங்குகிறது.
கேரளாவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாள்வதிலும் நாம் சாதித்திருக்கிறோம். அதற்காகவும் நமக்கு பாராட்டுகள் குவிகின்றன. கேரளத்தில் இன்னும் 4.16 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் 55,717 பேர் மட்டுமே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்”.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.