சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) நிலுவையாக ரூ.5 லட்சம் கோடியை அரசும், பெரிய நிறுவனங்களும் வைத்துள்ளன என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குப் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்த நிலையில், அரசும், பெரிய நிறுவனங்களும் சேர்ந்து ரூ.5 லட்சம் கோடி நிலுவைத்தொகை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தத்கது
மத்திய சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் கொல்கத்தா வர்த்தக கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் காணொலி மூலம் இன்று உரையாற்றினார.
அப்போது அவர் கூறியதாவது:
''சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) நிலுவையாக ரூ.5 லட்சம் கோடி இருக்கிறது. இதில் மாநில அரசுகள், பல்வேறு மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ளன.
இந்த நிலுவைத் தொகையை அனைத்து அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து அடுத்த 45 நாட்களில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பி நிலுவைத்தொகையை நிறுவனங்களுக்கு வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் பெருநிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் போதெல்லாம் விரைவாக நிலுவைத் தொகையை நிறு, நடுத்த நிறுவனங்களுக்கு வழங்கிவிடுங்கள் என வலியுறுத்தி வருகிறேன்.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை நாம் மேலும் வலிமைப்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்கள்தான் சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சிறு, நடுத்தர நிறுவனங்களில் கிராம அளவிலான தொழில்களை உருவாக்குவதற்காக மத்திய அரசு சிறப்புத்திட்டங்களை உருவாக்க ஆலோசித்து வருகிறது''.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவிதத்தார்.