உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்களில் வேலைக்கு எடுக்கும் போது உத்தரப் பிரதேச மாநில அரசிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்வோர் ஆணையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்வது பிறகு மற்ற மாநிலங்களில் உ.பி. தொழிலாளர்களின் வேலை தேவை எனும்போது இந்த ஆணையத்திடமிருந்து முன் அனுமதி பெறுவது என்று இரட்டை நோக்கமாக ஒரு திட்டத்தை பரிசீலித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் யோகி கூறும்போது, “அவர்கள் நம் மக்கள். சில மாநிலங்களில் உ.பி.தொழிலாளர்களுக்கான தேவை ஏற்பட்டால் உ.பி.அரசிடம் அனுமதி பெற வேண்டும்” என்றார்.
இதுவரை, அதாவது ஞாயிறு வரை சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் உ.பி.க்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து புலம்பெயர்வோர் கமிஷனை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக கூடுதல் முதன்மை செயலர் அவனீஷ் அவாஸ்தி தெரிவித்துள்ளார்.
அதே போல் தொழிலாளர்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க காப்பீடு வசதி குறித்தும் முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.
“காப்பீடு, சமூகப் பாதுகாப்பு, மறு வேலைவாய்ப்பு உதவி, வேலையின்மை அலவன்ஸ் ஆகியவை உள்ளிட்ட தொழிலாளர் நலன் விவகாரங்கள் இந்த கமிஷன் மூலம் பரிசீலிக்கப்படும்” என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
மேலும் அவர் கூறும்போது, “நமது மிகப்பெரிய மனித வள ஆதாரமே இந்த தொழிலாளர்கள்தான், நாம் அவர்களுக்கு உ.பி.யில் பணி வழங்குவோம். மாநில அரசு அவர்களுக்கு வேலை வழங்க குழு ஒன்றை அமைக்கவுள்ளது, அவர்களது சமூக-சட்ட-நிதி உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது” என்றார்.
அதே போல் பிற மாநிலங்களில் உ.பி.தொழிலாளர்களுக்கு வேலை உறுதி, மற்றும் பாதுகாப்பு இருந்தால்தான் அனுப்பப்படுவார்கள் என்று முதல்வர் கருதுவதாக அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்தார்.
உ.பி.யில் உள்ள தொழிலாளர்கள் யார் யார், அவர்கள் திறமை என்னவென்பதற்காக திறன் வரைபடம் ஒன்றையும் தயாரிக்க ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
“அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒரு நிறுவனமோ, பிற மாநிலங்களோ உ.பி.தொழிலாளர்கள் தேவை என்றால் அவர்களது சமூக-சட்ட-நிதி உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.