கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் பிபிஇ பாதுகாப்பு உடைகள் உரிய தரத்துடன் தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தனிநபர் பாதுகாப்பு சாதன(பிபிஇ) உடைகளின் தரம் பற்றி கவலை தெரிவித்து ஊடகங்களில் சிலவற்றில், சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த தயாரிப்புகளுக்கு, மத்திய அரசின் கொள்முதலுடன் சம்பந்தம் இல்லை. பிபிஇ உடைகளை, ஜவுளித்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட 8 பரிசோதனைக்கூடங்களில் ஒன்று பரிசோதித்து அனுமதி வழங்கிய பின்பே, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கொள்முதல் நிறுவனமான எச்எல்எல் லைப்கேர் லிமிடெட் கொள்முதல் செய்கிறது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தொழில்நுட்ப குழு பரிந்துரைத்த சோதனையில், தகுதி பெற்ற பின்பே, பிபிஇ உடைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
விநியோகிக்கப்படும் மாதிரிகளை பரிசோதிக்க நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி மாதிரியை எச்எல்எல் நிறுவனம் பரிசோதிக்கிறது. தரக்குறைபாடு இருந்தால், அந்த நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைகளின் படி பிபிஇ உடைகள் கொள்முதல் செய்யப்படுவதை அனைத்து மாநிலங்களும்/ யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
மேலும், இந்த பரிசோதனைக் கூடங்களால் தகுதி செய்யப்பட்ட தயாரிப்பாளர்கள், அரசின் இ-சந்தையில் இடம் பெறுகின்றனர். பிபிஇ உடைகள் தயாரிக்க தகுதி பெற்ற தயாரிப்பாளர்கள், இ-சந்தையில் இணைய வேண்டும் என ஜவளித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. அப்போதுதான், அதற்கேற்ப மாநிலங்கள் கொள்முதல் செய்ய முடியும். தகுதி பெற்ற தனியார் தயாரிப்பாளர்கள் பற்றிய முக்கிய தகவல்களும் ஜவுளித்துறை இணையதளத்தில் உள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவைகளை போதுமான அளவில் நிறைவேற்ற, பிபிஇ உடைகள், என்95 முக கவசங்களின் உள்நாட்டு தயாரிப்பை இந்தியா குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இன்று நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள் மற்றும் என்-95 முககவசங்களை இந்தியா தயாரிக்கிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு 111.08 லட்சம் என்-95 முககவசங்களும், சுமார் 74.48 லட்சம் பிபிஇ உடைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.