கரோனா வைரஸால் கடந்த இரு மாதங்களாக முடங்கியிருந்த உள்நாட்டு விமான சேவை இன்று நாடுமுழுவதும் தொடங்கினாலும் தனிமைப்படுத்தும் விதிமுறையால் தொடர்ந்து பயணிகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. சில மாநில அரசுகள் முழுமையாக விமானங்களை இயக்க சம்மதிக்காமல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
முழுமையான விமான சேவை இயக்கம் என்பது அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகே இயக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த 60 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. அதிகாலை விமானங்கள் முதலில் டெல்லி-புனே இடையேயும், மும்பை-பாட்னா இடையேயும் இயக்கப்பட்டன.
நாடுமுழுவதும் இன்றுஇயக்கப்பட உள்ள 1,050விமானங்களுக்கு டிக்கெட் முன்பதிவு முழுமையாக இருந்தது. ஆனால் தனிமைப்படுத்தும் விதிகளை தீவிரமாக மாநிலங்கள் அமல்படுத்தும் என்று தகவல் வெளியானதால், பயணிகள் பலரும் அதிருப்தி அடைந்து டிக்கெட்டுகளை ரத்து செய்தனர். இதனால் விமானங்கள் தங்கள் இயக்கத் திட்டமிருந்த விமானங்களின் அளவில் மூன்றில் ஒருபகுதி மட்டுமே இன்று இயக்கி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் உம்பன் புயல் தாக்கத்தால் கொல்கத்தா மற்றும் பக்தோரா விமான நிலையங்கள் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை எந்த விமானமும் மேற்கு வங்கத்துக்கு இயக்கப்படாது. ஆனால், 28-ம் தேதி முதல் நாள்தோறும் 20 விமானங்களை மட்டும் இயக்கினால் போதும் என மாநில அரசு விமானப்போக்குவரத்து துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோல மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் விமானங்கள் இயக்கம் இன்று குறைக்கப்பட்டுள்ளன. மும்பைக்கு இன்று 50 விமானங்களும், ஹைதராபாத்துக்கு 30 விமானங்களும் மட்டுமே இயக்கப்படுகின்றன. நாட்டில் முக்கியமான விமான நிலையமாக மும்பை இருப்பதால், அங்கு பயணிகள் அதிகம் வந்தால் இப்போதுள்ள சூழலில் கையாள்வது கடினம் ஆதலால் குறைந்த அளவ விமானங்களை இயக்க உத்ததாக்கரே அரசு, மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
இதைபோல கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னைக்கு நாள்தோறும் அதிகபட்சமாக 25 விமானங்களை திங்கள்கிழமை முதல் இயக்கப்படும். ஆனால் புறப்பட்டு செல்வதில் எந்த எண்ணிக்கை கட்டுப்பாடும் இல்லை என்று மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதேபோல ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம், விஜயவாடா நகரங்களுக்கு நாளை முதல் குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளன. கரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் உள்நாட்டு விமான சேவையை முழுமையாக அனுமதிக்க மாநில அரசுகள் அச்சம் கொள்கின்றன.
உள்நாட்டு விமான சேவையை முழுமையாக அனுமதிக்க மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழகம் போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மேலும், பல்வேறு மாநில அரசுகள் விமானப் பயணத்தின் மூலம் வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் விதியை தீவிரமாக அமல்படுத்தியிருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. இதனால் ஏராளமானோர் ஏற்கெனவே டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உள்நாட்டு விமானப் பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை நேற்று வெளியிட்டபோதிலும், அதில் மாநில அரசுகள் தங்கள் தேவைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.
இதன்படி ஜம்மு காஷ்மீருக்குள் விமானம் மூலம் வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் கண்டிப்பாக அரசின் தனிமை முகாமுக்குச் செல்ல வேண்டும் என அறிவித்துள்ளது.
இதேபோல கேரள அரசும் தங்கள்மாநிலத்துக்குள் வரும் விமானப்பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள். கரோனா அறிகுறிகள் இருந்தால், கண்டிப்பாக அரசின் தனிமை முகாமுக்கு அனுப்பப்படுவார்கள், மற்றவர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. வர்த்தகரீதியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் செல்லும் பயணிகள் 14 நாட்கள் அரசின் தனிமை முகாமில் தங்க வேண்டும், பிஹாருக்குள் செல்லும் பயணிகள் 14 நாட்கள் அரசின் தனிமை முகாமில் கட்டணம் செலுத்தி தங்க வேண்டும் என விதிமுறை வகுத்துள்ளன.
ஆந்திராவுக்குள் செல்லும் விமானப் பயணிகள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், பரிசோதனையில் கரோனா இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்துக்குள் வரும் விமானப்பயணிகள் அனைவரும் கண்டிப்பாக அரசின் தனிமை முகாமுக்கு 14 நாட்கள் செல்ல வேண்டும், விரும்பினால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பில் 7 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக அரசின் தனிமை முகாமுக்கு 7 நாட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதில் அவர்களுக்கு கரோனா இல்லை என உறுதியானால், அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதசேம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும்எனத் தெரிவித்துள்ளது.
இந்த தனிமைப்படுத்தும் விதிமுறைகளால் பயணிகளிடையே அச்சம் எழுந்து பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்