புதுடெல்லி: ஊரடங்கு காரணமாக வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப ஷ்ராமிக் என்ற சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பிஹாரில் உள்ள நவாடா என்ற இடத்துக்குச் சென்ற ஷ்ராமிக் ரயிலில் சென்ற கர்ப்பிணிக்கு திடீரென ரயிலில் பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து ரயிலில் இருந்த அதிகாரிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். வழக்கமாக ஷ்ராமிக் ரயில்கள் வழியில் எங்கும் நிற்காது. ஆனால், பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ரயில் ஆக்ராவில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்த டாக்டர் புல்கிடா தலைமையிலான குழுவினர், ஆக்ராவில் ரயிலிலேயே பிரசவத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். பின்னர், அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ரயில்வே துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பிறந்த குழந்தையின் படத்தையும் வெளியிட்டுள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ஷ்ராமிக் ரயில்களில் கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை ரயிலிலேயே 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் உலகத்தில் புதிய குழந்தைகளின் நல்வரவு என்று ரயில்வே பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.