இந்தியா

வேலை செய்யாத எம்.பி.க்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை

பிடிஐ

நாடாளுமன்ற கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில், வேலை செய்யாத எம்.பி.க்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் 21-ம் தேதி நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ் தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழலில் சிக்கிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்கு நேற்று முன்தினம் சென்ற மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிடம், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு ‘வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை’ என்ற கொள்கையை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது:

அரசு அதிகாரிகள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. இதுபோல, ‘வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை’ என்ற கொள்கையை எம்.பி.க்களுக்கும் நடைமுறைப் படுத்தலாம் என்பது எனது கருத்து.

இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் களுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். இத்தகைய கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சி உறுப்பினர் களிடையே ஒருமித்த கருத்தை எட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது அமைச்சரின் சொந்த கருத்தா, அரசின் கருத்தா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் சர்மா நேற்று கூறும் போது, “நான் என்ன கூறினேன் என்பதை ஆராய வேண்டும். நிச்சயமாக இந்தக் கருத்து என்னுடையதல்ல.

இது தொடர்பாக பதில் அளிப்பதற்கு எனக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இது குறித்து மக்களவைத் தலைவரும் மூத்த அமைச்சர்களும்தான் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT