கரோனா வைரஸ் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சிவப்பு மண்டலங்களில் விமான நிலையங்களைத் திறக்க அனுமதித்தது மோசமான ஆலோசனை என்று மத்திய அரசை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விமர்சித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்குப் பின் 25-ம் தேதி (நாளை) உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உள்நாட்டு விமானச் சேவையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் 1.30 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் எனத் தெரிகிறது. டெல்லியில் மட்டும் 380 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளதை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விமர்சித்துள்ளார். அவர் மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சிவப்பு மண்டலங்களில் விமான நிலையங்களைத் திறந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதிப்பது என்பது மோசமான ஆலோசனை. தெர்மல் ஸ்கேனிங் மூலம் மட்டும் பயணிகளைப் பரிசோதித்து அனுப்புவது போதுமானதாக இருக்காது.
இ்ப்போதுள்ள சூழலில் ஆட்டோ, வாடகைக் கார்கள், பேருந்துகளை இயக்குவதும் கடினமானது. விமானப் போக்குவரத்து இயக்கத்தால் கரோனா நோயாளிகள் அதிகரித்தால் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். பச்சை மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலத்துக்குள் வரும் மக்களும் கூட கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மும்பை போன்ற எந்நேரமும் பரபரப்புடன் இயங்கும் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளைத் தொடர்ந்து பரிசோதிக்கவும், தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகமான பணியாட்கள் அவசியம் இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குவதைத் தள்ளிவைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கெனவே உம்பன் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலம், மீட்புப்பணிகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவரும் ஷ்ராமிக் ரயில்களை வரும் 26-ம் தேதி வரை மேற்கு வங்கத்துக்கு இயக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இப்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்தையும் நிறுத்திவைக்கக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்தை இயக்குவதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களாக உம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதில் அரசு தீவிரமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது எங்கள் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வரும் 30-ம் தேதிக்குப் பின் தொடங்குமாறு மத்திய விமானப் போக்குவரத்தைக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் மாநிலத்துக்குள் வந்தவுடன் 14 நாட்கள் தனிமை முகாமுக்குச் செல்லக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.