இந்தியா

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் இருந்து விமானத்தில் வருவோருக்கு 7 நாட்கள் கட்டாய தனிமை: கர்நாடக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் காரணமாக 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகவில் கரோனாபாதிப்பு குறைவாக இருப்பதால் ஊரடங்கு விதிமுறைகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன.

அதேநேரம் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் 31-ம் தேதி வரை சாலை வழியாக கர்நாடகாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உள்நாட்டு விமான சேவை வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக அரசின்சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் 7 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப் படுத்தப்படுவார்கள். அதன் பிறகு7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கர்நாடக சுகாதாரத் துறை விதிமுறையின்படி கர்ப்பிணிகள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாகதனிமைப் படுத்தப்படுவார்கள். அவசர வேலை நிமித்தமாக கர்நாடகா வருவோர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சான்றிதழ் பெற்ற மையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தங்களுக்கு தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.

இந்த சோதனை பயணம் செய்வதற்கு முந்தைய‌ 2 நாட்களுக்குள் எடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே செல்லும்.அதேபோல அனைத்து பயணிகளும் முக கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இரா.வினோத்


SCROLL FOR NEXT