மகாராஷ்ட்ராவிலிருந்து சைக்கிளில் 7 நாட்கள் பயணித்து உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி தனது மியூசிவியான் கிராமத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உ.பி. பண்டா மாவட்டத்தில் உள்ள மியூசிவியான் கிராமத்தில் தன் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த தொழிலாளி சுனில் (வயது 19) வெள்ளிக்கிழமையன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏஎஸ்பி லால் பரத் குமார் பால் தெரிவித்தார்.
“லாக்டவுனினால் 7 நாட்கள் சைக்கிளில் வந்த சுனில் வீட்டிலேயே தனிமையில் இருந்தார், தனிமைக்காலமும் முடிவடையும் நேரம் வந்தது. ஆனால் வெள்ளியன்று அவர் பிணமாகத் தொங்கியதைத்தான் காண முடிந்தது, பிரேதப்பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார் ஏ.எஸ்.பி. பரத்குமார் பால்
தற்கொலை செய்து கொண்ட சுனிலின் குடும்பத்தினர் கூறும்போது, சுனிலின் தந்தை லாக்டவுனால் குஜராத்தில் சிக்கியிருக்கிறார். சுனில் வீட்டுக்கு வந்த போது அவர் பாக்கெட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. லாக்டவுனுக்குப் பிறகே வேலைபறிபோனதாகத் தெரிவித்தனர்.