புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தவறுதலாக கிருமினிநாசி அடிக்கப்பட்ட காட்சி : படம் உதவி ட்விட்டர் 
இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மீண்டும் கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடிப்பு: தலைநகரில் நடந்த அவலம்; தவறுதலாக நடந்துவிட்டதாக விளக்கம்

பிடிஐ

புலம்பெயர் தொழிலாளர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்று சமூகத்தில் குரல்கள் வலுத்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதர்களென்றும் பாராமல் அவர்கள் மீது கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், தவறுதலாக நடந்துவிட்டது, எந்திரக்கோளாறால் அவர்கள் மீது குழாய் பழுதடைந்து மருந்து தெளிக்கப்பட்டது என்று தெற்கு டெல்லி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நொய்டா, டெல்லி பகுதியில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்ள், குடும்பத்தினர் பரேலி நகருக்கு கடந்த மார்ச் மாதம் சென்றனர். அப்போது, அவர்களை ஊருக்குள் விடாமல் தடுத்த அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் அமரவைத்து அவர்கள் மீது கிருமி நாசினி மருந்தை பீய்ச்சி அடித்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சில், கிருமிநாசினி மருந்துகளை மனிதர்கள் மீது அடிக்கக்கூடாது அது பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தனர்

இந்த சூழலில் தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தினர், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நேற்று கிருமி நாசினி மருந்தை பீய்ச்சி அடித்துள்ளனர், இதுதொடர்பாக வீடியோ காட்சியும் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது

உத்தரப்பிரதேசம் பரேலி நகரில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி: கோப்புப்படம்

இதனால் பதற்றமடைந்த டெல்லி மநகராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி மருந்து கலக்கி வைத்துள்ள ஜெட் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு திடீரென மருந்து அழுத்தம் தாங்காமல் குழாய் வழியாக வெளியே வந்துவிட்டது. வேண்டுமென்றே செய்யவில்லை என்று விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்கள்

தெற்கு டெல்லியில் லஜபதி நகரில் உள்ள ஹெமு கலாணி உயர்நிலைப்பள்ளியில் புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவரும் ஷ்ராமிக் சிறப்புரயிலில் செல்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயிலில் ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சியில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் குழாயை பிடித்து தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி மருந்தை தெளிக்கிறார், இதை மற்ற ஊழியர்கள் வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் இந்த பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை தங்க வைத்ததிலிருந்து பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும், சாலையிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், லாரியில் உள்ள ஜெட் எந்திரத்தின் அழுத்தம் தாங்காமல் குழாய் மூலம் கிருமி நாசினி மருந்து தொழிலாளர்கள் மீது தெறித்துவிட்டதாக தெற்கு டெல்லி மாநகராட்சி நி்ர்வாகம் தனது விளக்கத்திலிருந்து பின்வாங்கவில்லை.

SCROLL FOR NEXT